

மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தப்படவில்லை. கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 4 நாட்களில் 1,237 டிராக்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மேட்டூர் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையில் 82 ஆண்டுகளாகியும் இதுநாள் வரை தூர் வாரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மேட்டூர் அணைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் கே.பழனிச்சாமி தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதிகளான வலது கரையில் உள்ள மூலக்காடு, பண்ணவாடி, இடது கரையில் உள்ள கூணான்டியூர், புதுவேல மங்கலம் ஆகிய 4 இடங்களில் தூர்வாரி அதில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண் தூர்வார தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதாகவும், வண்டல் மண் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார் முற்றிலும் தவறானது என்று மேட்டூர் துணை ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண் எடுக்க கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தால் ஒரே நாளில் அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மண் அள்ளிக் கொடுக்க தனியார் நிறுவனங்களிடம் சமூக பங்களிப்பு திட்டத்தின்படி பொக்லைன் பெறப்பட்டு அதனைப் பயன்படுத்தி டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்துக் கொடுக்கப்படுகிறது.
விவசாயிகள் சிரமமின்றி வண் டல் மண் பெறுவதற்காக பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்ற னர். கடந்த 28-ம் தேதி 495 டிராக்டர், 29-ம் தேதி 144 டிராக்டர், 30-ம் தேதி 236 டிராக்டர், 31-ம் தேதி 362 டிராக்டர் அளவுக்கு மொத்தம் 3,711 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளிடம் ஆர்வமில்லை
தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இதனால், கோடைகால சாகுபடியை விவசாயிகள் பலர் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மேட்டூர் அணை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், நிலத்தில் விதை நடவு செய்துவிட்டதால், வண்டல் மண் கிடைத்தாலும் அதை எடுத்துச்சென்று விளை நிலத்தில் கொட்ட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், மேட்டூர் அணை உட்பட அனைத்து இடங்களில் வண்டல் மண் எடுத்துச் செல்வதற்கு விவசாயிகளிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை.