

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவி யேற்றார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட் டையன் உட்பட 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதே தினத்தில் அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தன்னை பதவியேற்க அழைக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
மும்பையில் இருந்த ஆளுநர் சென்னை வருவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில், சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி உயர்த்தினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜி னாமா செய்ய வைத்ததாக குற்றம் சாட்டினார். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தனித் தனியே சந்தித்து தங்கள் தலைமை யில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்
இதற்கிடையே, அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என 2 அணிகள் உருவாகின. ஓ.பன்னீர் செல்வத்துக்கு பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அமைச்சர் பாண்டியராஜன் உட்பட 9 எம்எல்ஏக்களும், 12 எம்.பி.க்களும் ஓபிஎஸ் அணிக்கு வந்தனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறி வந்தனர்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பளித்தது. இதனால் முதல்வராக பதவியேற் கும் வாய்ப்பை சசிகலா இழந்தார். இதையடுத்து, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரினார். அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நேற்று முன்தினம் இரவு 2 தரப்பினரும் அடுத்தடுத்து ஆளுநரை மீண்டும் சந்தித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனி சாமி ஆளுநர் மாளிகைக்கு அழைக் கப்பட்டார். அப்போது அவரை உடனே ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், 15 நாட்களுக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனி சாமி, அமைச்சரவை பட்டியலை வழங்கினார். ஓ.பன்னீர்செல்வம், க.பாண்டியராஜன் ஆகிய இருவரைத் தவிர பழைய அமைச் சரவையில் இருந்த அத்தனை பேரும் அமைச்சர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். கே.ஏ.செங்கோட்டை யன் மட்டும் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளார். அவருக்கு பாண்டிய ராஜன் கவனித்து வந்த பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப் புகளே வழங்கப்பட்டுள்ளன.
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அமைச் சரவை நேற்று மாலை பதவியேற்றது. இதற்கான விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. பதவி யேற்க உள்ள 30 அமைச்சர்களும் மாலை 4.20 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்தனர். 4.25 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மேடையில் வந்து அமர்ந்தார். 4.35 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் வந்ததும் விழா தொடங்கியது. 4.42 மணிக்கு தமிழகத்தின் 21-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி யேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஆண்டவன் மீது ஆணையாக என்று கூறி முதல்வர் பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட் டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 8 பேர் ஒரே நேரத்தில் பதவியேற்றனர். பின்னர் 8, 7, 7 என தனித்தனி குழுக்களாக அமைச்சர்கள் பதவி யேற்றனர். அனைத்து அமைச்சர் களும் ஆண்டவன் மீது ஆணையாக எனக் கூறி பதவியேற்றனர். மேடையில் ஆளுநருடன் அவரது மனைவி வினோதா ராவ், தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர் இருந்தனர்.
எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு துறைகளின் செயலா ளர்கள், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை அதிகா ரிகள், முப்படைகளின் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர்.
கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் அவரது மனைவி வினோதா ராவ் ஆகியோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை பதவியேற்றது. பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கு கோருவதற்காக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக சட்டப்பேரவை தலைவர், பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 18-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார். அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூடும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவின்படி, பேரவைத் தலைவர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிவிப்பார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகே, புதிய அரசு முழுமையாக செயல்படத் தொடங்கும்.