

உள்ளாட்சி தேர்தல் அறிவிக் கையை நாளை (செப்.8) வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்தாமல் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதியை மறுவரையறை செய்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
தொகுதி மறுவரையறை
இவ்வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி தொகுதிகளை மறுவரையறை செய்ய போதிய காலஅவகாசம் இல்லை. அதனால் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அறிவிக்கை நாளை (8-ம் தேதி) வெளியாகும் என்று தெரிகிறது.
விசாரணை ஒத்திவைப்பு
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் முற்பகலில் ஆஜராகி, ‘‘இவ்வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், வாதிடுவதற்கும் கால அவகாசம் வேண்டும்’’ என்று கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு (8-ம் தேதி) தள்ளிவைத்தனர்.
அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் கூறுகையில், ‘‘ நாளை மறுநாள் (8-ம் தேதி) உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரினார். அதற்கு, ‘‘ தற்போதைய நிலையில் இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.