

சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா திரையரங் கங்களும், அம்மா வாரச் சந்தைகளும் அமைக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சே.சந்தானம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக மேயர் தனது தொடக்க உரையில் அம்மா திரையரங்கம் மற்றும் வாரச்சந்தை குறித்து அறிவித் ததாவது:
சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் வணிக வளாகங் களாக மாற்றப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த கட்டணம் வசூலிக்கும் அம்மா திரையரங்குகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அமைக்கப்படும்.
காய்கறி, சமையல் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை பொது மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே வாங்கிக் கொள்ள அனைத்து வார்டுகளிலும் அம்மா வாரச்சந்தை அமைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறைச்சாலை கைதிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் இங்கு விற்கப்படும்.
இவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களில் பயன்பாடு இல்லாத நேரங்களில் செயல்படும் என்று அவர் அறிவித்தார்.