Last Updated : 30 Dec, 2013 12:00 AM

 

Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

கொடுங்கையூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நிரம்பி வழியும் செப்டிக் டேங்க்

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் பகலில் ஈ தொல்லை, இரவில் கொசுத் தொல்லை. இவை மட்டுமின்றி செப்டிக் டேங்க் நிரம்பி வழிவதால், காசு கொடுத்து பொதுக்கழிப்பிடம் செல்லும் அவலம். பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வேறு வழியில்லாமல் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேறுகின்றனர் ராஜரத்தினம் நகர் மக்கள்.

வடசென்னையில் கொடுங்கையூர் குப்பை வளாகத்துக்கு எதிரே 60 அடி தூரத்தில் உள்ளது குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள். 288 வீடுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோருக்கு கூலி வேலைதான் பிரதானம். குடி யிருப்புகள் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்வதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர்.

`சாக்கடை வசதி இல்லாமல் நாற்றத்தில் தினம் தினம் வேதனை யடைகிறோம். மழை பெய்யும்போது கழிவுநீரும் மழைநீரும் தேங்கி நாற்றம் அடிக்கிறது. கவுன்சிலரிட மும் அதிகாரிகளிடமும் சொல்லிச் சொல்லி சலித்துவிட்டது. நாங்களே பணம் வசூலித்து, பள்ளம் தோண்டி கழிவுநீரை வெளியேற்றினோம்’ என்கின்றனர் வரலட்சுமி, உஷா, ரதிதேவி.

`கொடுங்கையூர் குப்பைக் கிடங் கில் உற்பத்தியாகும் ஈக்களால் பகலில் தொல்லை, இரவில் கொசுத் தொல்லை, காய்ச்சல் வந்து கூலி வேலைக்குப் போக முடியாமல் தவிக்கிறேன்’ என்றார் குமார்.

‘ஒருநாள்விட்டு ஒருநாள் குடிநீர் வருகிறது. தண்ணீர் வராத நாளில் யாராவது குடிநீர் குழாயை அடித்துவிட்டால் கழிவுநீர் கலந்து வருகிறது. நாற்றம் குடலைப் புரட்டு கிறது’ என்கிறார் கிருஷ்ணன்.

68-ம் எண் வீட்டில் வசிக் கும் ரமேஷ் கூறுகையில், ‘கழிப்பறை யிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே தேங்கி நிற்பதால் நாற்றம் தாங்க முடியவில்லை. கழிப் பறைக்குள் குடியிருப்பது போல கொடுமையாக இருக்கிறது’ என்றார் வேதனையுடன்.

65-ம் எண் வீட்டில் வசிக்கும் அமுதா கூறும்போது, ‘செப்டிக் டேங்க்கில் இருந்து கழிவுநீர் வெளி யேற்றப்படாததால், கழிப்பறையில் கழிவுநீர் நிரம்பி நாற்றம் அடிக்கிறது. வேறுவழியில்லாமல் நானும், கணவரும், 4 குழந்தைகளும் காசு கொடுத்து பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துகிறோம்’ என்றார்.

15-ம் எண் வீட்டைச் சேர்ந்த பாபு கூறுகையில், ‘எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் வசிப்பது மட்டுமின்றி, மேல் மாடியில் யாராவது துணி துவைத்தாலோ, குளித்தாலோ என் வீட்டு மேற்கூரை வழியாக தண்ணீர் ஒழுகுகிறது.

வீட்டு வாடகையை தவறாமல் வசூலிக்கும் அரசு அதிகாரிகள் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுக்கின்றனர்’ என்றார்.

‘இப்படியொரு அவலத்தை வேறெங்கும் பார்த்ததில்லை’ என்கிறார் தேவை என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் இளங்கோ.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘விரிசல் விட்டுள்ள வீடு களை சரிசெய்யும் பணி நடக்கிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க குடிசை மாற்று வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x