

மழை வெள்ளப் பாதிப்பின்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 10 படைகள் தயார் நிலையில் உள்ளன என்று மீட்புப் படை கமாண்டன்ட் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி யுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
மீட்புப் பணியில் 1500 பேர்
வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி மழை நீர் வடிகால் பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் 1500 பேர் மட்டுமின்றி, குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்றல் வாரிய ஊழியர்கள் மற்றும் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநில நிவாரணப் பிரிவு ஆணையர் ஸ்ரீதர் மற்றும் வருவாய்த் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாய்த் துறை தலைமையகமான எழிலகத்தில், 1070 என்ற எண்ணும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற தொலைபேசி எண்ணும் கட்டுப்பாட்டு மையங்களில் செயல்பாட்டில் உள்ளன.
இதற்கிடையே, மழை வெள்ளம் மோசமாக பாதித்த பகுதிகளில், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அரக்கோணம் பகுதியிலிருந்து செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காம் பட்டாலியன் தயாராக உள்ளது. இதுகுறித்து படையின் கமாண்டன்ட் (பொறுப்பு) பி.ஜி.வர்கீஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நான்காம் பட்டாலியனில் 10 படைகள் மீட்பு நடவடிக்கைக்கு எப்போதும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு படையிலும் 45 வீரர்கள் உள்ளனர். தமிழக அரசோ அல்லது மாநகராட்சியோ அழைத்தால், உடனடியாக அவர்கள் குறிப்பிடும் இடங்களுக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயாராக உள்ளோம்.
மழை வெள்ளத்தில் செல்வதற் கான படகுகள், ரப்பர் மிதவைகள், கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் என அனைத்து பாதுகாப்பு உபகரணங் களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.