

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல்நிலை தேர்வில் சென்னை மனித நேயம் அறக்கட்டளையில் படித்த 227 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மனித நேயம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:
சென்னையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வியை வழங்கும் விதமாக கடந்த 2005-ம் ஆண்டு முதல் மனித நேயம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி நடத்திய தேர்வில் எங்கள் அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற 227 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இந்த தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கான வகுப்புகளும் இலவசமாக நடத்தப்படவுள்ளன. இதற்கு மாணவர்கள் தங்களுடைய விவரங்களை மனித நேயம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.