Last Updated : 17 Jan, 2017 10:07 AM

 

Published : 17 Jan 2017 10:07 AM
Last Updated : 17 Jan 2017 10:07 AM

மக்கள் மனதில் கலந்த நாடகக் கலைஞர் கே.ஏ.ஜி

இன்று முதலாம் ஆண்டு நினைவுநாள்

நாட்டுப்புற இசைக் கலைஞரும், புதுச்சேரி பல் கலைக்கழக நிகழ்த்து கலை (நாடகம்) துறை முன்னாள் தலை வருமான கே.ஏ.குணசேகரனின் முதலாண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நாட்டுப்புற மண்ணின் மரபிசைப் பாடகர், தலித் இசைக் கலைஞர், திரைப்படப் பாடகர், நாடக இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் கே.ஏ.குணசேகரன். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் பாடிய ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலை அவரைப் போலவே கால்சட்டை அணிந்த வயதில் இளையான்குடி பள்ளியில் பாடி முதல் பரிசு பெற்றவர். தனது மானசீக குருவான கவிஞர் மீரா வின் பரிந்துரையுடன் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங் கலைப் படிப்பில் சேர்ந்தவர், பாட்டுப் போட்டி, ஓட்டப்பந்தயம், கால்பந்து என பல போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்து, கல் லூரிக்குப் பெருமை சேர்த்தார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தபோது, மார்க்சிய சிந்தனையை இவருக்கு ஊட்டியவர் தோழர் மீ.ஜேம்சன். கேஏஜி-க்கு மக்கள் மேடையைக் காட்டிய தோழர். அவரது சிந்த னையில் உருவானதே மண்ணின் கலை மணக்கும் ‘தன்னானே கலைக்குழு’. ‘சாமி’, ‘தெய்வ வழிபாடு’, ‘காதல்’ ஆகியவற்றைப் பேசும் பல்வேறு நாட்டுப்புறக் கலைக் குழுக்கள் மத்தியில், கேஏஜி-யின் ‘தன்னானே கலைக்குழு’ மக்கள் பிரச்சினைகளைப் பேசும், பாடும். மக்களின் ஆழ்மனதைத் தட்டி எழுப்பும்.

அவர் இருந்த காலம் வரை ‘தன்னானே இசைக்குழு’வில் கிராமிய இசைக் கருவிகளையும், தாலாட்டு, கும்மி, வண்டிக்காரன் பாட்டு, முளைப்பாரிப் பாட்டு, நையாண்டி, தெம்மாங்கு போன்ற நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பயன்படுத்தினார்.

இன்று நம்மிடையே இருந்து மறைந்துபோன இசைக் கருவிகளும், மெட்டுகளும் அவரது இசையில் ஒலித்தன. ஆனால். இன்று பொருளும், பேரும் வாங்கும் நோக்குடன் மக்களை தம் வாழ்வின் நிலை உணரச் செய்தல் என்பதற்குப் பதிலாக, வணிகப்படுத்தல் நாட்டுப் புற கலைக்குழுக்களின் முதன்மை நோக்காக ஆகியுள்ளது.

ஒவ்வொரு கச்சேரியிலும் 17-க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெறும். ‘வந்தனம்யா வந்தனம்’ என்ற சபை வந்தனப் பாடலுடன் தொடங்கும் கச்சேரி, இறுதியில் கவிஞர் இன்குலாப்பின் சாகா வரம் பெற்ற ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்ற வீறார்ந்த பாடலுடன் நிறைவுறும்.

பாடலை நிறைவு செய்யும்போது, ‘எதை எதையோ, எதை எதையோ, எதை எதையோ’ என்று இழுத்துப் பாடுவதில் அவர் கொடுக்கும் அழுத்தம், உண்மையில் அவரது அடிவயிற்று நாதம் அறுந்து விழும் அளவுக்கு வீறுகொண்டு வெறித்தனமாக உடலும் முகமும், கண்ணும் அத்தனை உள்ளக்குமுற லும் அதில் வெளிப்படும். மக்கள் பாவலர் இன்குலாப், அக்கினிக் குஞ்சாகப் பிறப்பித்த ‘மனுசங்கடா’ பாடலை ஏந்திச் சென்று, அந்த தலித் தேசிய கீதத்தை உலகெங்கும் இசை மேடைகள் வழியாக சர்வதேச கீதமாக்கியவர் கேஏஜி.

‘பூ முடிச்சு பொட்டும் வச்சு’, ‘நோட்டைக் காட்டி ஓட்டுக் கேட்டு’, ‘ஏரோப்பிளான் வானத்தில்’, ‘வாகான ஆலமரம்’, ‘ஆக்காட்டி ஆக்காட்டி’, ‘பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே’, ‘முக்கா மொழம் நெல்லுப் பயிறு’, என பல பாடல்கள் தனித்துவம் கொண் டவை. இவையே திரை இசைக்கும் அவரை இழுத்துச் சென்றன.

‘புது நெல்லு புது நாத்து’ திரைப் படத்தில் ‘ஆக்காட்டி’ பாடலைப் பயன்படுத்தும் வாய்ப்பு வந்தபோது, ‘என் மக்கள் வலிகளை - என் மக்கள் வரிகளை என்னால் மட்டுமே வெளிக்கொணர முடியும்’ என்று கூறி, வேறொருவர் பாட மறுத்து விட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தில் வைரமுத்துவின் தத்துவ வரிகளான ‘வேலாயி அடியே வேலாயி’ பாடலைப் பாடிய இவரை, நன்றாக உணர்ந்து பாடிய தாக வைரமுத்து பாராட்டினார்.

18-க்கும் மேற்பட்ட திரைப்படங் களில் நடித்துள்ளார். நாசரின் ‘தேவதை’ படத்தில் முதல் பாடலை எழுதி, இசை அமைத்து, நடித்துப் பாடினார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், மியான்மர், தாய்லாந்து என பல நாடுகளில் கச்சேரி நடத்தி, ஒலி நாடாக்கள் தயாரித்தும் வெளியிட் டுள்ளார். வெளிநாட்டு வானொலி, தொலைக் காட்சிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவர் வெளியிட்ட ‘அக்னீஸ்வரங் கள்’ பாடல் நூல் 5-வது பதிப்பாக 1997-ல் 200 பாடல்களுடன் வெளி வந்தது. இப்பாடல் ஒவ்வொன்றும் ஓர் ஆய்வுத் தலைப்பாக உருப் பெறக்கூடியது. அவை உருப்பெற்று திறனாய்வு செய்யப்பட்டால், விளிம்புநிலை மக்களின் விடிவு காலமாக அமையும். அத்துடன், கேஏஜி கலந்ததும், கரைந்ததும் இந்த அடித்தட்டு மக்களிடம்தான் என உறுதிபடச் சொல்லும் காலச் சாட்சியாக அமையும்!

முனைவர் வீ. ரேவதி குணசேகரன்

வரலாற்றுத்துறை பேராசிரியர்

பெரியார் அரசு கலைக்கல்லூரி,

கடலூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x