Published : 24 Dec 2013 08:59 PM
Last Updated : 24 Dec 2013 08:59 PM

‘ஓட்டு கேட்டுப்போனா மக்கள் விரட்டி அடிப்பாங்க..’: மதுரை மாநகராட்சியில் அதிமுகவினர் கொந்தளிப்பு

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், மக்களவைத் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுச் சென்றால் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என அதிமுக கவுன்சிலர்கள் கொந்தளிப்புடன் பேசினர்.

மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். ஆணையர் கிரண்குராலா, துணைமேயர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த மண்டலத் தலைவர் ராஜபாண்டி பேசுகையில், வீடு கட்ட அனுமதிகேட்டு இ-பிளான் மூலம் விண்ணப்பித்தவர்கள் பல மாதங்களாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கோச்சடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மண்டலத் தலைவர்களின் அதிகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான திட்டப்பணிகளை மண்டலக் குழுவே முடிவு செய்யும் அதிகாரம் வேண்டும். இல்லையெனில் நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டு முதல்வரைப் பார்த்துத்தான் பேச வேண்டும். இதனை ஏற்காவிட்டால் மண்டலக் குழுவை கலைத்துவிட வேண்டியதுதான் என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு மண்டலத் தலைவர் ஜெயவேல் பேசுகையில், எனது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி இங்கு 28 முறை பேசியுள்ளேன்.

இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் தினமும் காலை 100 பேர் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கின்றனர். மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. வார்டுக்குள் போய் 6 மாதம் ஆகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுப்போனால் விரட்டி அடிப்பாங்க’ என்றார்.

வேலைக் குழு தலைவி கண்ணகி பேசுகையில், ‘எனது வார்டில் மண் அடைப்பு காரணமாக சாக்கடைகளில் தினமும் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. அதற்குள் குறைந்தபட்ச பணிகளையாவது செய்ய வேண்டும் என்றார்.

கல்விக் குழு தலைவி சுகந்தி பேசுகையில், குடிநீர் செல்லும் பிரதான குழாயில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் அருகிலுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் எனது வார்டில் குடிநீர் இணைப்பு அளிக்க ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வசூலிக்கின்றனர். உண்மையான கட்டணத்தை விளம்பரமாக வெளியிட வேண்டும். அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என்றார்.

மேயர் பதிலளித்து பேசுகையில், தவறு செய்த ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரதான குழாயில் இருந்த இணைப்பு துண்டிக்கப்படும். கட்டண விவரம் விளம்பரப்படுத்தப்படும் என்றார். ஆணையர் கிரண்குராலா பேசுகையில், மாநகரில் உள்ள அனுமதி பெற்ற விளம்பர போர்டுகள் குறித்த பட்டியல் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்ததும் அனுமதியற்ற போர்டுகள் அகற்றப்படும்’ என்றார்.

அதிமுக கவுன்சிலர் ராஜா சீனிவாசன் பேசுகையில், மார்ச் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதற்குள் அடிப்படை வசதிக்கான பணிகளை செய்ய வேண்டும. அப்போதுதான் மதுரை தொகுதியில் வெற்றிபெற முடியும் என்றார். அதிமுக கவுன்சிலர் இந்திராணி பேசுகையில், வார்டில் குடிநீர் வசதி. சாக்கடை வசதி இல்லை. தேர்தல் நெருங்குவதால் மக்களிடம் ஓட்டு கேட்டுப்போனால் என்னென்ன சொல்வார்களோ என பயந்து வருகிறோம் என்றார்.

அதிமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி பேசுகையில், 37-வது வார்டிலுள்ள 4 சாலைகள் நீண்ட காலமாக மோசமாக உள்ளது. மக்கள் மறியல் செய்கின்றனர். உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் கோபத்தை சமாளிக்க முடியாது என்றார். மற்றொரு அதிமுக கவுன்சிலர் லெட்சுமி பேசுகையில், எனது வார்டில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. நிறைய சாலைகள் மோசமாக உள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் அமல்படுத்தப்படும் புது விதிகள், சட்டங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் அதற்கான அரசாணைகளை அளிக்க வேண்டும் என்றார்.

இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்தார். இதேபோல் மேலும் பல கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை சரிசெய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x