Last Updated : 20 Nov, 2013 11:20 AM

 

Published : 20 Nov 2013 11:20 AM
Last Updated : 20 Nov 2013 11:20 AM

மகளிர் குழு மூலம் பணம் பட்டுவாடா? - ஏற்காடு இடைத்தேர்தலில் பரபரப்பு

ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர மகளிர் சுய உதவிக் குழுக்களையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அரசியல் கட்சியினர் பயன்படுத்துக்கின்றனரா என தேர்தல் கண்காணிப்புப் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது கவுரவ பிரச்சனை என்றால், எதிர்க் கட்சிகளுக்கு ஆளும் கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், தனது செல்வாக்கை நிறுத்திக் கொள்ள சந்தர்ப்பமாக இருக்கிறது.

24 மணி நேர கண்காணிப்பு

புதுக்கோட்டை, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதேபோல, பல்வேறு தேர்தல்களில் வாக்காளரைக் கவர அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள், பணம் அளிப்பது சம்பந்தமாக தேர்தல் கமிஷனுக்குப் புகார்கள் சென்றதை அடுத்து, தேர்தல் கண்காணிப்பு குழுவின் மூலம் தேர்தல் நடக்கும் தொகுதியில் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் மூலம் பயன் பெற்றுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை தேர்தல் பணிக்கு அரசியல் கட்சி சார்பில் ஈடுபடுத்தப்படுகின்றனரா என தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தனிக் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குவது நடைமுறையில் உள்ளது. தேர்தல் சமயத்தில் சுழல் நிதிகள் வழங்கப்படுகிறதா என்றும் அவர்களுக்கு வேறு வகையில் ஏதேனும் அரசியல் கட்சியின் மூலம் ஆதாயம் கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் முறைப்படுத்தி தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

பறக்கும் படை சோதனை

திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் பரிசுப் பொருட்கள் (வேட்டி, சேலை, குடம்) உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என்றும் வாக்காளர்களுக்கு உணவு வழங்கு கின்றனரா என்றும் பறக்கும் படை அதிகாரிகள் ஒவ்வொரு ஊராட்சி பகுதியாக சென்று கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகள் சந்தேகப்படும்படி திருமணக்கூடங்கள் பதிவு செய்து சந்தேகப்படும் நிகழ்வு ஏதும் இருந்தால், மத்திய வருமான வரித்துறையின் உதவி துணை இயக்குநர் கவனத்துக்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு செல்வர். அவர் வருமான வரித்துறையின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பார்.

கோயில்களுக்கு வெளியே அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தாலும், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். நகை அடகு பிடிப்போர் மூலம் வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்படுகின்றனவா என்றும், மக்கள் கூடும் இடங்கள், வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்கள் என ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட மூன்று பேரூராட்சி, 64 ஊராட்சி பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கான பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தினந்தோறும் அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x