Published : 18 Nov 2013 10:15 AM
Last Updated : 18 Nov 2013 10:15 AM

தமிழக அரசின் சூரியசக்தி கொள்கை: புதிய நிபந்தனைகள்

தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை நிறைவேற்றுவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி சாதனங்களை பொருத்துவதற்கு, அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், சூரிய மின்சக்தி கொள்கையை அமல்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, அதற்கு முறையான அனுமதி பெற வேண்டுமென்று கூறி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து ’சூ மோட்டோ’ விசாரணையைத் துவங்கியது. இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டன.

இதனடிப்படையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சூரிய மின்சக்தியை மின் தொகுப்புடன் இணைக்கும் தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின் நுகர்வோர்கள், இரண்டு வகையான மீட்டர்கள் பொருத்த வேண்டும். ஒரு மீட்டரில் சூரிய சக்தி உற்பத்தியைக் கணக்கிட வேண்டும். மற்றொன்றில் சம்பந்தப்பட்ட நுகர்வோர், மின் தொகுப்புக்கு வழங்கிய மற்றும் தொகுப்பில் எடுத்த மின் அளவை கணக்கிட வேண்டும்.

இந்த மீட்டர்களை, மத்திய மின்சார ஆணைய விதிமுறைக்குட் பட்டு, எந்த நிறுவனத்தில் வாங்க வேண்டுமென்ற பட்டியலை, மின்வாரியம் அறிவிக்க வேண்டும்.

மீட்டர்கள் மற்றும் மின் தொகுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துதல், சூரிய மின்சக்தி உபகரணங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது போன்றவற்றுக்கான கட்டணத்தை, சம்பந்தப்பட்ட நுகர்வோரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட உபயோகிப்பாளரிடமிருந்து மின் தொகுப்புக்கு அனுப்பும் மின்சார அளவில், 90 சதவீதம் கணக்கில் எடுக்கப்படும்; 10 சதவீதம் கட்டமைப்பு செயல்பாடு இழப்பாக கருதப்படும்.

மின் வாரியத்தின் சார்பில், புதிய பட்டியல் கொண்ட கணக்கீட்டு அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அதில், மின் பயனீட்டு கணக்கீட்டாளர்கள், சூரியசக்தி உற்பத்தி, தொகுப்புக்கு அனுப்பிய அளவு, தொகுப்பிலிருந்து அதிகமாக மின்சாரம் எடுத்த அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் சூரியசக்தி மூலம் உற்பத்தியாகிறது என்ற விவரத்தை, மின் வாரியத்திலிருந்து, எரிசக்தி முகமையான ’டெடா’வுக்கு மாதம் தோறும் அனுப்ப வேண்டும்.

மின் கட்டமைப்பில் பழுது, மின் உபகரணங்கள், மின்னூட்டி, டிரான்ஸ்பார்மர், துணை மின் நிலையம் ஆகியவற்றில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட நுகர்வோரின் மின் தொகுப்பு இணைப்பை, மின் வாரியம் தற்காலிகமாக துண்டிக்கலாம்.

சம்பந்தப்பட்ட பகுதியின் டிரான்ஸ்பார்மர் மின் வினியோக கொள்ளளவில், 30 சதவீதத்திற்கு மட்டுமே, முந்தியவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சூரிய மின் சக்திக்கான தொகுப்பு இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் எஸ். நாகல்சாமி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x