

உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்த தானம் செய்த 2 பெண்கள் உட்பட 89 பேருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மா.சௌ.சங்கீதா பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் 11 அரசு ரத்த வங்கிகள் உள்ளன. அவற்றின் மூலம் கடந்த நிதி யாண்டில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 988 அலகு ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில் 95 சதவீதத்துக்கும் மேல் தன்னார் வலர்கள் வழங்கியதாகும்.
தாமாக முன்வந்து ஓராண்டில் 3 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த ஆண்களுக்கும், 2 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த பெண்களுக்கும், ஆண்டுதோறும் உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு பாராட்டுச் சான்றுகள் வழங்கி கவுரவிக்கப் படுவது வழக்கம்.
சென்னை மாவட்ட தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு அலகு சார்பில், உலக ரத்தக் கொடையாளர் தின விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடந்தது. அதில் சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மா.சௌ.சங்கீதா பங்கேற்று, அதிக முறை முறை ரத்ததானம் வழங்கிய 2 பெண்கள் உட்பட 89 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப் பட்டன. தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு அலகின் சென்னை மாவட்ட திட்ட மேலாளர் க.கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.