

கொடைக்கானல் கோடை விழா வின் இரண்டாவது நாளான நேற்று சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி மற்றும் இசை நாற்காலி போட்டி நடைபெற்றன. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நேற்று முன்தினம் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இரண்டாவது நாளாக நேற்றும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இப் பூங்காவில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இசை நாற்காலி போட்டி நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட் கிளப் சார்பில் ஏரியில் பல்வேறு பிரிவுகளில் படகு போட்டி நேற்று காலை நடைபெற்றது. துடுப்பு படகு, மிதிபடகு, ஸ்கல் படகு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.