

தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த 25 சதவீத இடஒதுக்கீட்டை, பள்ளி நிர்வாகங்கள் முறையாக செயல்படுத்தவில்லை என, காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவு மற்றும் நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு அறிவித்த 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தவில்லை என, காங்கிரஸ் கட்சியின் வாலாஜாபாத் வட்டாரத் தலைவர் அவளூர் சீனிவாசன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அவளூர் சீனிவாசன் கூறும்போது, “காஞ்சிபுரம் நகரம் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில், அரசு அறிவித்த விதிகளுக்கு உட்பட்டு மேற்கண்ட 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்ககையை செயல்படுத்தவில்லை. தங்களின் விருப்பத்துக்கேற்ப சேர்க்கை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு பள்ளி கட்டிடங்களை அமைத்துள்ளதா என, கல்வித்துறை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனு அளித்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, “தனியார் பள்ளிகளில், மேற்கண்ட விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெற்றுள்ளதா என, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், பெற்றோர்கள் யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை” என்றார்.
தனியார் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மதிவாணனிடம் கேட்டபோது, “அரசின் 25 சதவீத இடஒதுக்கீடு மூலம், பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங் களை சேகரித்து வருகிறோம், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.