சிறிய வீட்டில் நான்கைந்து குடும்பங்கள்: தவிக்கும் நரிக்குறவர்கள்

சிறிய வீட்டில் நான்கைந்து குடும்பங்கள்: தவிக்கும் நரிக்குறவர்கள்
Updated on
2 min read

“சிறிய வீட்டில் நான்கைந்து குடும்பங்களாக வசிக்கிறோம். எங்கள் அவலத்தைப் போக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்” என்று நரிக்குறவர் சமூக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையிலிருந்து காரமடை செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் சென்றால் இடது புறம் அமைந்திருக்கிறது பிரஸ் காலனி என்ற அரசு அச்சகக் குடியிருப்பு. இதன் பின்புறம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறியதும் பெரியதுமான வீடுகளைக் கொண்ட நந்தினி காலனி அமைந்துள்ளது.

சுமார் 150 நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்கும் இந்தக் காலனி அமைந்ததற்கு பின்னணியில் பெரும் சோகம் உண்டு. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வடகோவை ரயில் நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வந்தன.

நகரம் வளர்ந்தபோதும், ரயில்வே மேம்பாலம் கட்டும்போதும் அவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். அந்தக் குடும்பங்களில் பெரும்பாலானோர் கோவை எரு கம்பெனி அருகில் குடிபெயர்ந்தனர்.

குப்பை கொட்டும் இடமாகவும், சுகாதாரக் கேடுடனும் விளங்கிய அந்தப் பகுதியும் காலப்போக்கில் நகரமயமாகியது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருக்கெடுத்தன. எனவே, அங்கிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டனர் இந்த மக்கள்.

அப்போதுதான் அவர்களில் ஒரு பகுதியினர் “நாங்கள் எங்கே போனாலும் விரட்டியடிக்கிறீர்கள். எங்களுக்கு நிரந்தர இடம் வேண்டும்” என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு அச்சக குடியிருப்புக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அவர்கள் குடி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு இலவசப் பட்டா வழங்குவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகளாகிவிட்டது.

ஏறத்தாழ 7 ஆண்டுகள் இங்கு வசித்த நிலையில் மீண்டும் அருகில் உள்ள புதிய குடியிருப்புகளால் பிரச்சினை ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த நிலங்களை வாங்கிய ரியல் எஸ்டேட் பிரமுகர், தனி வீடுகளை கட்டினார். அவற்றை விற்பதற்கு அருகில் இருந்த நரிக்குறவர் காலனி தடையாக இருந்தது. இதையடுத்து, அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், அந்த புறம்போக்கு நிலத்தையும் வாங்க முற்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, நரிக்குறவர்கள் காலனியை மறைக்கும் வகையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குடிசைவாசிகள், “இந்த சுவர் எந்த நேரத்திலும் எங்கள் வீடுகள்மீது விழுந்துவிடும். அப்போது உயிர் சேதமும் நிகழலாம். மேலும், அவர்கள் நிலத்தில் கட்டாமல், புறம்போக்கு நிலத்தில்தான் இந்த சுவரைக் கட்டுகின்றனர். எனவே, அந்த சுவரை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனுவும் அளித்தனர்.

இதற்கிடையில், மழை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து, நரிக்குறவர் குடிசைகள் மீது விழுந்தது. அதில் சந்திரா(40), அவரது மகன் வடிவேலு (10), நந்தினி (14) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அப்பகுதி மக்களுக்காக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை தேர்வு செய்து, 65 குடும்பங்களுக்கு தலா 1.25 சென்ட் வீட்டுமனைகளை அதிகாரிகள் வழங்கினர். சுமார் 13 வருடங்களுக்கு முன் அங்கு வீடுகளை கட்டி, ‘நந்தினி காலனி’ என்று பெயரிட்டு, அங்கு வசித்து வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கே.சிவா கூறும்போது, “எங்களுக்கு இடம் வழங்கியபோதே சில வீடுகளில் 2, 3 குடும்பத்தினர் வசித்தனர். அவர்களுக்கு பின்னர் இடம் ஒதுக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை இடம் தராததால், ஒவ்வொரு வீட்டிலும் 4, 5 குடும்பங்கள் வசிக்க வேண்டியுள்ளது” என்றார்.

“இங்கு 65 வீடுகள் உள்ளன. மொத்தம் 150 ரேஷன் கார்டுகள் உள்ளன. 400 வாக்காளர்களும் இருக்கின்றனர். 3 தலைமுறை குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசிக்க வேண்டியுள்ளது. எனவே, மாற்று இடம் வழங்குமாறு பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை” என்றார் பி.இன்பரோஜா.

அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.சைதா கூறும்போது, “அந்தக் காலத்தில் காடை, கவுதாரி, குள்ளநரி, முயல்களைப் பிடித்து விற்போம். இந்திரா காந்தி ஆட்சியில் அதற்கு தடை விதித்தனர். பின்னர், நகருக்குச் சென்று ஊசி, பாசி மணி வாங்கி விற்கிறோம். சிலர் பட்டை, சோம்பு, கசகசா ஆகியவற்றை பாக்கெட் போட்டு, தெருத்தெருவாக விற்கின்றனர். எங்களுக்கு வங்கிகளில் கடனுதவியும் வழங்குவதில்லை. எங்களது சுயஉதவிக் குழுவில் இருந்து மட்டுமே பணம் கிடைக்கிறது. வியபாரம் தொடங்க கடனுதவி வழங்குமாறு பலமுறை கேட்டும் பயனில்லை” என்றார்.

“எங்களுக்கு வீட்டுமனை கொடுத்தபோது, அரசே வீடு கட்டித்தரும் என்றனர். பின்னர், ரூ.20 ஆயிரம் கடன் வழங்கினர். மாதம் ரூ.200 வீதம் இதுவரை ரூ.40 ஆயிரத்தை வட்டி, அசலுக்காக கட்டியுள்ளோம். ஓரு மாதம் தவணை தவறினாலும் வட்டிக்கு வட்டியுடன் கட்டுமாறு கூறுகின்றனர். பலருக்கும் வீடு கட்டித்தரும் அரசு எங்களை மட்டும் கைவிட்டுவிட்டது” என்றார்.

இந்த காலனியைச் சேர்ந்த குழந்தைகள், அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு படிக்கச் செல்கின்றனர். அங்கும் கட்டணம் செலுத்திய படிக்க வேண்டியுள்ளது. 8-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500, 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.3,500 செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களது அவல நிலையைப் போக்க அரசு கருணையுடன் உதவ வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in