தென்தமிழனுக்கு ஒரு மாத பரோல்

தென்தமிழனுக்கு ஒரு மாத பரோல்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம், மருதையாற்றுப் பாலம் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட தென் தமிழனுக்கு (67) ஒரு மாத கால பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1986-ல் மருதையாற்றுப் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த தென்தமிழனுக்கு முதலில் மரண தண்டனை வழங்கப்பட்டு, பின்னர், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்தமிழன், ஒரு கால் உடைந்து நடக்க இயலாத நிலையில் சுயநினைவின்றி திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்தமிழனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவரது மகள் செங்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என். பிரகாஷ் ஆகியோர், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக தென்தமிழனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

திருச்சி அரசு மருத்துவ மனையில் தென்தமிழனை உடனிருந்து கவனித்து வரும் செங்கொடி கூறியது:

“சுயநினைவின்றி இருக்கும் எனது தந்தைக்கு பரோல் கிடைத்தது மகிழ்ச்சி. இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஆனால், அவரைக் குணப்படுத்த இந்த ஒரு மாதம் போதாது. நடக்க முடியாமல் சுயநினைவின்றி இருக்கும் எனது தந்தையை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in