Last Updated : 25 Jun, 2016 01:02 PM

 

Published : 25 Jun 2016 01:02 PM
Last Updated : 25 Jun 2016 01:02 PM

தேர்தல் தோல்வி குறித்து எதிர்தரப்பினர் புகார்: ராகுல் அதிருப்தியால் பதவி விலகிய இளங்கோவன்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான திமுக 50 சதவீத இடங் களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 15 சதவீத இடங்களில் மட் டுமே வெற்றி பெற்றது. இதற்கு இளங்கோவனின் தவறான அணுகுமுறையே காரணம் என சோனியா, ராகுலிடம் ஏராளமான புகார்கள் குவிந்தன.

தேர்தல் தோல்விக்கு இளங்கோ வனே காரணம் என ப.சிதம்பரம், கே.வீ. தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் மேலிடத்தில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி டெல்லி சென்ற இளங்கோவன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார்.

பணபலம் காரணமாக பல தொகுதி களில் தோல்வி ஏற்பட்டதாக அவர் கூறிய விளக்கத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறைந்தது 20 தொகுதிகளிலாவது வென்று ஒரு மாநிலங்களவை உறுப் பினர் பதவியை பெற்றிருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடவில்லை என ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தான் வெளிநாடு சென்று திரும்பும்வரை கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி யிருக்குமாறு கூறியதாகவும், இதனால் இளங்கோவன் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை திரும்பிய இளங்கோவன், கடந்த 15-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும் சோனியா, ராகுல் உள்ளிட்ட மேலிடத் தலைவர்கள் யாரும் இளங்கோவனை அழைத்துப் பேசவில்லை. கடந்த 17-ம் தேதி டெல்லி சென்ற அவரால், சோனியா காந்தியை சந்திக்க முடிய வில்லை. 3 நாட்கள் காத்திருந்து விட்டு, ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.

20 மாதங்களில் ராஜினாமா

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பி.எஸ்.ஞானதேசிகன் கடந்த 2014 அக் டோபர் 30-ம் தேதி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 2014 நவம்பர் 1-ம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இளங்கோவனுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், பதவியேற்ற 2 மாதங்களிலேயே ப.சிதம்பரம் - இளங்கோவன் இடையே மோதல் தொடங்கியது.

2014 டிசம்பர் 20-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ‘காமராஜர் பெயரைச் சொல்லி இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது’ என்றார். இதுபற்றி கருத்து தெரிவித்த இளங்கோவன், ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ என்றார். 2015 ஜனவரி 22-ம் தேதி கார்த்தி சிதம்பரம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடை பெற்றது. இதனால் கோபமடைந்த இளங்கோவன், ‘உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது?’ எனக்கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

2015 ஜனவரி 30-ம் தேதி முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸில் இருந்து விலகி னார். அதைத்தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட இளங்கோவன், ‘இன் னொருவரும் தனது வாரிசோடு வெளி யேறினால் காங்கிரஸுக்கு விமோ சனம் ஏற்படும்’ என்றார். இதனால் ஆத் திரமடைந்த ப.சிதம்பரம் ஆதரவாளர் கள் கோவையில் இளங்கோவன் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்காக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். சோனியா, ராகுலிடம் ப.சிதம்பரம் புகார் தெரிவித்ததை யடுத்து 6 பேர் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

ராகுலிடம் புகார்

2015 ஜூலை 30-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்தக் கூட்டத் துக்கு அதிகமான நபர்களை அழைத்து வரவில்லை எனக்கூறி தங்கபாலு ஆதரவாளர்களான 6 மாவட்டத் தலை வர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையில் தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன் உள் ளிட்ட 11 தலைவர்கள் இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுலிடம் நேரில் புகார் தெரிவித்தனர்.

2015 நவம்பர் 19-ம் தேதி இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவுக்கு பேனர் வைப்பது தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், மகளிர் காங் கிரஸ் தலைவர் விஜயதரணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலையடுத்து மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதரணி நீக்கப்பட்டார்.

இப்படி உள்கட்சி மோதல் தொடர்ந்து வந்த நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி யில் 41 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு 8-ல் மட்டும் வெற்றி பெற்றது. இதனால், தேர்தல் தோல்விக் குப் பொறுப்பேற்று இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழக காங்கிரஸில் அடுத்த தலைவர் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x