

பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழக அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். தமிழக அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய அவர்கள், அங்கு வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினர். அதில் தமிழக அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. அவர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அதன்படி, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ‘அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது’ என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து இளைஞர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.