

மதுரை அருள்தாஸ்புரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் கர்ப்பிணி ஒருவர், மஞ்சள் காமாலையால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை பாதிப்பால் முடங்கி கிடக்கின்றனர்.
மதுரை மாநகராட்சியில் 2011-ம் கணக்கெடுப்புபடி 14,62,240 பேர் வசித்தனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்திருக்கும் நிலையில் அதற்கேற்ப நகரில் குடிநீர், பாதாளச் சாக்கடை, சாலை, சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, மாநகராட்சி குடிநீர் குழாய் விநியோகம், சுகாதார கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குழாய்களிலேயே குடிநீர் விநியோகம் நடக்கிறது. பாதாளச் சாக்கடை, குடிநீர் பராமரிப்பு பணிக்காக மாநகராட்சி பணியாளர்கள் குழிகளைத் தோண்டிவிட்டு பல மாதங்களாக மூடாமல் விடுகின்றனர். குடியிருப்பு பகுதிகள், முக்கிய சாலைகளில் பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு, குழிகளை தோண்டும்போது குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது. இதனால் கடந்த ஓராண்டாகவே பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீரே வருகிறது. இதனால், மஞ்சள் காமாலை, காலரா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சி 8-வது வார்டில் குடிநீர் சாக்கடை நீர் கலப்பதால் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாக இருக்கிறது. போடியில் வசித்த சுப்ரியா (24) என்பவர் முதல் பிரசவத்துக்காக அருள்தாஸ்புரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த சில நாட்களில் அவர், மஞ்சள் காமாலை நோய்க்கு இறந்ததாகக் கூறப்படுகிறது. அருள்தாஸ்புரம், முனியாண்டி கோயில் தெரு, திருவிக நகர், வயல் பகுதி, பாலமுருகன் கோயில் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (21), விக்னேஷ்குமார் (21), ஆரிஷ் (24), அஷ்ரப் (22), பாண்டி (21), மாலதி (45), பேயாண்டி (70), தீபன் (5) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியை சேர்ந்த மக்களில் பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லாதால் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இளைஞர்கள், முதியவர்கள், எழுந்து நடக்க முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு இல்லை. அவருக்கு குழந்தை பிறந்தபின் வலிப்பு இருந்ததால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் இறந்தார். அப்பகுதியில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடக்கிறது, என்றார்.
குடிநீர் விற்பனை அமோகம்
இப்பகுதியை சேர்ந்த வினோத் கூறியதாவது: மாநகராட்சி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்கிறது. இந்த குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் மக்கள் அச்சமடைந்து தனியாரிடம் ரூ. 25-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி குடிக்கின்றனர். நடுத்தர, ஏழை மக்கள், அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல், கழிவுநீர் கலந்த நீரையே குடிக்கும் நிலைக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.