வேலூரில் 2 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பு- மேலும் 8 இடங்களில் இம்மாத இறுதிக்குள் தொடங்க முடிவு

வேலூரில் 2 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பு- மேலும் 8 இடங்களில் இம்மாத இறுதிக்குள் தொடங்க முடிவு
Updated on
1 min read

வேலூர் மாவட்டம், பெருங்கால் மேடு, திருமலைச்சேரியில் அரசு புதிய ஆற்று மணல் குவாரிகளைத் திறந்துள்ளது.

இதுபோல திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு, கணியனூர் ஆகிய இடங்கள் உள்பட 8 இடங்களில் இம்மாத இறுதிக்குள் புதிய மணல் குவாரிகள் திறக்கப் பட்டு மணல் விற்பனை தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசுத் துறைகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

எனவே, மணல் தட்டுப்பாட்டைப் போக்க அரசு புதிய குவாரிகளைத் திறக்க முடிவு செய்தது. அதன் படி, 12 இடங்களில் புதிய மணல் குவாரிகளைத் திறக்க அனுமதிக் கும்படி மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத்திடம் (எஸ்.இ.ஐ.ஏ.ஏ.) தமிழக அரசு கோரியது.

முதல் கட்டமாக வேலூர் மாவட்டம், பெருங்கால்மேடு, திருமலைச்சேரி ஆகிய இடங்களில் பாலாற்றில் புதிய மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மணல் விற்பனை சமீபத் தில் தொடங்கியது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: மணல் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு சமீபத்தில் (26-11-13) வேலூர் மாவட்டம், பெருங்கால் மேடு, திருமலைச்சேரி ஆகிய இடங்களில் பாலாற்றில் புதிதாக மணல் குவாரிகளைத் திறந்துள்ளது. அங்கு 2 யூனிட் மணல் (200 கனஅடி) ரூ.840-க்கு விற்கப்படுகிறது. இது போல திருவள்ளூர் மாவட்டம், குசஸ்தலையாற்றில் செம்பேடு, கணியனூர் ஆகிய இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களிலும் ஆக மொத்தம் 8 இடங்களில் இம்மாத இறுதிக்குள் புதிய மணல் குவாரிகள் திறக்கப்படும். புதிய மணல் குவாரி 5 ஹெக்டேருக்கு குறைவாக இருந்தால் அதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கள்ள பிரான்புரம், பழையசீவரம் ஆகிய இடங்களில் இன்னும் ஒரு மாதத்துக்கு விற்கும் அளவுக்கு மணல் இருப்பு உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in