மதிமுகவுக்கு இனி வெற்றிதான்: வைகோ

மதிமுகவுக்கு இனி வெற்றிதான்: வைகோ
Updated on
1 min read

மதிமுகவுக்கு இனி வெற்றிகாலம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சங்கரன்கோவில் அருகே தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்த வைகோ நிருபர்களிடம் கூறியது:

12 ஆண்டுகளுக்கு முன் திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக நான், புதூர் பூமிநாதன், ஈரோடு கணேசமூர்த்தி, சிவகங்கை செவந்தியப்பன், அழகுசுந்தரம், வீர இளவரசன், பொடா கணேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடினோம்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த விழாவில் பங்கேற்று சென்னை திரும்பியபோது என்னைக் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு மறு ஆய்வுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என ஆய்வுக்குழு தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் இந்த வழக்கை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த மார்ச் 19-ம் தேதி மனுதாக்கல் செய்தேன். அதை நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை தள்ளுபடி செய்தனர்.

கடந்த 12 ஆண்டு சட்ட போராட்டத்தில் கிடைத்த வெற்றி இது. அதேபோல, விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசலாம். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதில் தவறு இல்லை என்ற சிறப்புமிக்க தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளேன். இப்போது நான் பேசியதில் தவறில்லை. வழக்கு போட்டதில்தான் தவறு என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இனிவரும் காலம் மதிமுகவுக்கு வெற்றி காலம் என்றார் வைகோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in