Published : 12 Jun 2017 01:37 PM
Last Updated : 12 Jun 2017 01:37 PM

நீட் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உடனடி நடவடிக்கை தேவை: முத்தரசன்

நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக, தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மத்திய அரசு இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை. மாநில அரசும் போதிய அழுத்தத்தை கொடுக்கவில்லை.

அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு, வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. சில மொழிகளில் வினாத்தாள் எளிமையாக இருந்துள்ளது. வேறு சில மொழிகளில் கடினமாக இருந்தன. எனவே இத்தேர்வின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரித்தால் அது பாரபட்சமாக அமைந்துவிடும். அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக இருக்காது. இதனால் பல்வேறு மாநில மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே இப்பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் மறுத்தேர்வை நடத்த வேண்டும். வினாத்தாள்களை வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் மட்டுமே செய்ய வேண்டும் வேறு வினாத்தாள் வழங்கக்கூடாது.

மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி, நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விவாதித்திட அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x