

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கடந்த மாதம் 21-ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையின் முதல் அறுவை சிகிச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி துறை செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் (49), சென்னை தி.நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வலது கை நடுவிரலில் பிரச்சினை இருந்தது. விரல்களை மடக்கினால், நடுவிரலை மட்டும் நீட்ட முடியாது. இந்தப் பிரச்சினையால், ஓராண்டாக அவதிப்பட்டு வந்தார். பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனில்லை.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்த சொக்கலிங்கத்தை பிளாஸ்டிக் சர்ஜரி துறைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறிய அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை சரியாகிவிடும் என்று தெரிந்தது. இதையடுத்து அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் டாக்டர் என்.சி.அரிகிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நடுவிரலின் அடிப்பகுதியில் சரியாக இயங்காமல் இருந்த நரம்பை இயங்க வைத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்திலேயே முறையான பயிற்சிக்கு பிறகு, அவரால் மற்ற விரல்களைப்போல நடுவிரலையும் சகஜமாக மடக்கி நீட்ட முடிந்தது. அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து டாக்டர் என்.சி.அரிகிருஷ்ணன் கூறுகையில், ‘‘வலது கையில் நடுவிரலை மட்டும் நீட்ட முடியாமல் அவதிப்
பட்டு வந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பிரச்சினையைத் தீர்த்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டது’’ என தெரிவித்தார்.