முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டம் தொடங்க வேண்டும் - உங்கள் குரலில் வாசகர் கருத்து

முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டம் தொடங்க வேண்டும் - உங்கள் குரலில் வாசகர் கருத்து

Published on

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டம் தொடங்க வேண்டும்

சென்னை

கடந்த 2011 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக அறிவித்த மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் சேவை தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் அறக்கட்டளை தலைவர் அ.திருமலை கூறியதாவது:

மூத்த குடிமக்களில் அதாவது அவர்கள் அறிவித்தபடி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சேவை இன்னும் தொடங் கப்படவில்லை. இது தொடர்பாக, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்து மனு கொடுத்தேன். அதன் பின் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச் சரிடம் 2 முறை, முதல்வர் தனிப்பிரிவில் 2 முறை மனு அளித்துள்ளேன். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 2012-ம் ஆண்டு கணக்கெடுப் பின் படி 75 லட் சம் மூத்த குடிமக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத் தினர்தான் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். மூத்த குடிமக்கள் நலன் கருதி அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘ மாணவர் களுக்கு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச பாஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவது அரசின் கொள்கை முடிவு. அரசு அறிவித்து அதற்கான ஆணை பிறப்பித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்’’ என்றனர்.

***

துப்புரவுப் பணி ஊக்கத்தொகை கிடைக்கவில்லை

சென்னை

சென்னையில் மழை வெள்ளத்துக்குப் பிறகு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவை வழியாக துப்புரவு தொழிலாளர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவுப் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த நாளொன்றுக்கு ரூ.300 ஊதியம் வழங்கப்படுவதில்லை. ரூ.200-க்கும் குறை வாகவே வழங்கப்படுகிறது.

மேலும் மழை வெள்ளத்துக்கு பிறகு கூடுதல் நேரம் பணிபுரிந்து குப்பைகளை அகற்றி யுள்ளனர். துப்புரவு தொழிலாளர்களுக்காக அரசு சார்பில் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு அந்த தொகை வழங்கவில்லை. இது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவன மனிதவள அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘எங்கள் நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது அரசு நிறுவனம் இல்லை. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் மற்றும் ஊதிய முறை பொருந்தாது. அரசும் தொழிலாளர்களுக்கான ஊக்கத் தொகையை எங்களிடம் வழங்கவில்லை’’ என்றார்.

***

நிவாரணங்கள் வழங்குவதில் பாகுபாடு கூடாது

சென்னை

நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பேரிடர், விபத்து, வன விலங்கு தாக்குதல், மின்சாரம் தாக்கி இறத்தல் போன்ற நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் விண்ணப்பித்தால், இறந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை நிவாரணமாக வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கூறும்போது, ‘‘பிரேக் பிடிக்காத பஸ் மோதி பலியானவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களுக்கு ரூ.4 லட்சம், யானை மிதித்து இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்குகின்றனர். அனைத்தும் உயிர்தானே? ஏன் இந்த பாகுபாடு. ஆந்திர மாநிலத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தொகைதான் வழங்குகின்றனர். இங்கும் அதேபோல் வழங்கலாம்’’ என்றார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பேரிடர் நிவாரணம் என்பது பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. முதலில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1.5 லட்சம், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.ஒரு லட்சம் என, ரூ.2.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது இந்த நிதி ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வன உயிரினங்கள் தாக்குதலால் யாரேனும் இறந்தால், முதலில் ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது.

அதன் பின், வனத்துறையில் இழப்பீட்டுக்கான தனி நிதி ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. முதல்வர் பொது நிவாரண நிதியைப் பொறுத்தவரை, பிரத்யேக நிகழ்வுகளில் முதல்வர் உத்தரவுப்படி இழப்பீடு அதிகம் வழங்கப்படுகிறது. மற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடு அளிக்கப்படுகிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in