Published : 22 Sep 2016 06:34 PM
Last Updated : 22 Sep 2016 06:34 PM

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆறரை ஆண்டுகளில் 3,425 நோயாளிகள் இறப்பு

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஆறரை ஆண்டுகளில் சிகிச்சைப் பலனின்றி 3,425 நோயாளிகள் இறந்துள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு , கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு ஜுலை மாதம் முடிய ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன்படி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்தவமனையின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு:

2010ல் 466, 2011ல் 471, 2012ல் 431, 2013ல் 539, 2014ல் 540, 2015ல் 621, 2016 ஜுலை வரையிலும் 357 என மொத்தம் கடந்த ஆறரை ஆண்டுகளில் 3,425 நோயாளிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 342. மேலும் கடந்த 2010லிருந்து 2016 ஜுலை வரையிலும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 8,255 நோயாளிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் சமூக ஆர்வலர் ராஜு கூறியதாவது,

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அளவிற்கு நிலையுயர்த்தப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும், கட்டிட வசதிகளும், படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

ஆனால் கடந்த ஆறரை ஆண்டுகளில் 342 குழந்தைகள் உள்பட்ட 3,425 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 2016 ஜனவரி முதல் ஜுலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் 35 குழந்தைகள் உள்பட 357 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் தினந்தோறும் 4 பேராவது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து ராமநாதபுரத்தில் கொண்டு செல்லும் போதே வழியில் உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 07.10.2015 அன்று உத்தரவிட்டும் இதுநாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதாலும், மருத்துவர்கள் பணி நேரத்திற்கு முறையாக வராததாலும் வராமல் அலட்சியப்படுத்துவதாலும் தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே, கடந்த தேர்தலில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x