

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர். மாணவிகள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவ, மாணவி களில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,427 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்தில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களை தடுக்கும் வகை யில் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் தலைமை யில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.