Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

நிரபராதியாகவே வெளியே வருவேன் : பேரறிவாளன் நேர்காணல்

கொலைக் குற்றம் எனத் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆரி ஷாரியரின் அனுபவங்களே ‘பாப்பிலான்’என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டு, பின் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டு, உலகெங்கிலும் கொண்டாடப்பட்டன. ஒரு தனி மனிதனின் சுதந்திர வேட்கையும் வீரமும் பேசும் தன் வரலாறு அது. இன்று கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்கிறார் பேரறிவாளன். ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, சிறைக் கம்பிகளுக்கு இடையில் நுழைந்து 22 ஆண்டுகள் கழித்து இன்று அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மூடியிருந்த திரைகள் விலகத் தொடங்கியிருக்கின்றன.

தொடக்கத்தில் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் ஒன்று, அவர் ‘பெல்ட் பாம்’ தயாரிப்பில் உதவினார் என்பது. ஆனால், “‘பெல்ட் பாம்’ செய்தது யார் என்று தெரியவில்லை” என்று சமீபத்தில் சொன்னார், விசாரணை அதிகாரி ரகோத்தமன். “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே தண்டனை அனுபவித்து விட்டார்கள்; அவர்களது மரண தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய வேண்டும்” என்று அடுத்து வேண்டுகோள் விடுத்தார், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்கு தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ். இப்போது “பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யவில்லை; அவருக்கு ராஜீவ் கொலைபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று, தான் நம்புவதாகச் சொல்லியிருக்கிறார் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தியாகராஜன்.

இரண்டு பேட்டரிகள் வாங்கித் தந்ததற்காக 19 வயதில் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர் பேரறிவாளன். கடந்த 22 ஆண்டுகளாகச் சிறையில், மரணத்தின் நிழலில் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருப்பவர், வாழ்வில் நம்பிக்கையின் வெளிச்சக்கீற்றை உருவாக்கியிருக்கின்றன, அந்த வழக்கு விசாரணையில் பங்கேற்றவர்களின் சமீபத்திய வார்த்தைகள். இவையாவது தனக்கு விடுதலையைப் பெற்று தருமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பேரறிவாளனிடம், அவரது வழக்கறிஞர் மூலம் தொடர்புகொண்டு எடுத்த நேர்காணல் இது.

உங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யவில்லை என்று தியாகராஜன் சொன்னபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கடந்த 22 வருடங்களாக நான் சொல்லிக்கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கான நம்பகத்தன்மையை இப்போது அவர் சொல்லியிருப்பது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட நான் மட்டுமே உண்மையைச் சொல்லி என்ன பயன்? என்னைக் குற்றவாளி என்று சொன்னவரும் நான் சொன்னது உண்மை என்கிறபோதுதான் அதற்கு மரியாதை கிடைக்கிறது.

எல்லோரும் நினைப்பதுபோல ‘உயிர்வலி’ஆவணப்படத்துக்காக அவரிடம் சென்று அந்தப் பேட்டியை எடுக்கவில்லை. அதற்கு வெகு நாட்களுக்கு முன்பே அவர் தன்னைத் தொடர்புகொள்ளும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அப்போது புல்லருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டிருந்தது. அந்த நிலை எனக்கும் ஏற்படும் என்று அஞ்சியே அவர் என்னைத் தொடர்புகொண்டார். உண்மையில், அவர் இப்படிச் சொல்லத் தயாராக இருக்கிறார் என்று எனக்குத் தெரிந்த இரவு, தூக்கம் வரவில்லை. எனது 22 ஆண்டுப் போராட்டத்துக்குப் பலன் கிடைத்திருப்பதாகவே நினைத்தேன். சிறையில் 22 ஆண்டுகளைக் கழித்த பிறகு, மரணம்பற்றிய பயம் எனக்குப் பெரிதாக இல்லை. ஆனால், பழிச் சொல்லோடு இறக்கக் கூடாது என்று நினைத்தேன். பழிச் சொல் இப்போது நீங்கியிருக்கிறது.

விடுதலைக்கான சாத்தியங்கள் இப்போது இருக்கின்றன என்று நம்புகிறீர்களா?

நான் விடுதலை ஆவதைவிட மிக முக்கியம், ஒரு நிரபராதியாக விடுதலை ஆக வேண்டும் என்பது. இப்போது எனக்குத் தேவை தண்டனைக் குறைப்பு அல்ல. நான் நிரபராதி. அப்படித்தான் இந்தச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறுவேன். தியாகராஜன் எனக்கு ராஜீவ் கொலைபற்றித் தெரிந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் எனக்கு சந்தேகத்தின் பலனை அளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். சந்தேகத்தின் பலனைச் சாத்தியப்படுத்த அரசியல் உறுதி தேவை. அது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. தமிழக முதல்வருக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை இதுதான்: பேரறிவாளனுக்காக அல்ல, ஒரு குடிமகனுக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக அவர் குரல் கொடுக்க வேண்டும்.

சிறையில் 22 ஆண்டுகள் கழித்திருக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

சிறைக் கம்பிகளுக்கு இடையில்தான் நான் வாழ்க்கையைப் பயின்றேன். சிறை ஒரு மனிதன்மீது கடுமையான நெருக்கடிகளைச் செலுத்தக்கூடியது. அதில் எனது அடிப்படை இயல்புகளைக் காப்பாற்றுவதே பெரிய போராட்டம். ஆனால், நான் எனது இயல்பை இழந்துவிடவில்லை என்பதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி. பல நெருக்கடிகளுக்கிடையில், பல துரோகங்களுக்கிடையில் நான் சிறைச்சாலையை எனக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டேன். எனது கல்வித் தகுதிகளை மேம்படுத்திக்கொண்டேன். சிறைச் சாலையில் ‘குரலமுது இசைக் குழு’அமைத்துப் பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். சிறை என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இது சிறை. திரும்பிப் பார்க்கும் போது, நான் கடந்து வந்த ஒற்றைப் பாதையில் சொல்ல முடியாத துயரம் மட்டுமே கவிந்திருக்கிறது.

ஒரு முறை உங்கள் மரணத் தேதியும் குறிக்கப்பட்டது…

ஆமாம். அதற்கு முன்பே ஒரு அதிகாரி, ஆணைகள் எப்போது வேண்டுமானாலும் வரும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். “எப்படிப்பட்ட மன உறுதி இருந்தாலும், ஆணைகளைப் பார்க்கும் போது கலங்கிவிடும்” என்று அந்த அதிகாரி திரும்பத் திரும்பச் சொன்னார். “சார், முதலில் நீங்கள் கலங்காமல் இருங்கள்” என்று நான் ஒரு கட்டத்தில் சொல்ல வேண்டியிருந்தது. ஆணைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் என்னை அழைத்தபோது, “என்ன தேதியாக இருக்கும்?” என்று கேட்டார். “நான் போட்டுவைத்த கணக்கின்படி செப்டம்பர் 7-ஆக இருக்கும்” என்றேன். அவர், “இல்லப்பா, செப்டம்பர் 9” என்றார். “அட, ரெண்டு நாள் கூடுதலா கிடைச்சிருக்கு சார், நல்ல விஷயம்தானே” என்றேன். அவர் கலங்கிவிட்டார். தண்டனை நிறைவேற்றப்படாது என்ற நம்பிக்கை ஒரு ஓரத்தில் வலுவாக இருந்தது. ஆனால், அதற்காகச் செங்கொடி தனது உயிரை மாய்த்துக்கொள்வார் என்று துளியும் நினைக்கவில்லை. என்னால் மறக்க முடியாத, கடக்க முடியாத வலி அது.

விடுதலைக்குப் பிறகு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

உண்மையிலேயே தெரிய வில்லை. நான் வெளியே இருந்ததைவிட, சிறைக்குள் கழித்த வாழ்க்கைதான் அதிகம். வெளியே உலகம் எப்படி இருக்கிறது… வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை உணரவே எனக்குச் சில மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். நிறைய எழுத வேண்டும்; குறிப்பாக, சிறை அனுபவங்களை எழுத வேண்டும் என்கிற எண்ணமிருக்கிறது. மற்றபடி தெளிவான திட்டமிடல் எதுவும் இல்லை. ஆனால், ஒன்று நிச்சயம்: தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிராக நான் போராடுவேன். மரண தண்டனைக்கு ஆதரவாக, நீங்கள் உணர்வுரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கருத்தியல்ரீதியாகவோ எந்த வகையில் வாதாடினாலும், அதே வகையில் என்னால் அதை முறியடிக்க முடியும். சிறை எனக்கு அவ்வளவு கற்றுத்தந்திருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் எனது மீதி வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய விருப்பம்.

கவிதா முரளிதரன்,
தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x