பொதுத் தேர்வுக்கு தயாராகும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள்

பொதுத் தேர்வுக்கு தயாராகும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள்

Published on

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு தற்போது அரசு குழந்தைகள் நலக் காப்பகப் பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வை முன்னிட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை புரசைவாக்கத்தில் குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் அரசு பெண் குழந்தைகள் நலக் காப்பக உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு பல பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பலர் சாலையில் பிச்சை எடுத்தவர்கள். சாலைதோறும் திரிந்து சிறு பொம்மைகள், கார் கண்ணாடி துடைக்க உதவும் துணி, புத்தகம் விற்று வந்தவர்கள். இத்தொழில்களில் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளை வைத்துப் பணம் பார்க்கும் கும்பல்களால் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

ரயில் நிலையங்கள்,பேருந்து நிறுத்தம், சாலை சந்திப்புகளில் இதுபோலத் திரியும் குழந்தைகளை போலீஸார் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீட்டு குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்க்கின்றனர்.அந்த குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது காப்பாளர் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் அவர்களுடன் அனுப்பிவைக்கப்படுவர். பெற்றோர், உறவினர் என யாரும் வந்து அழைத்துக் கொள்ளாவிட்டால் குழந்தைகள் நலக் குழுமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியான பெண்களுக்கான அரசு குழந்தைகள் நலக் காப்பகத்தில் தமிழக அரசே தங்கி படிக்க வைக்கிறது.

பொதுத் தேர்வு எழுதும் 33 பேர்

இந்த உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 230 பெண் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில் 33 மாணவிகள் 10-ம் வகுப்பு படிக்கின்றனர். வரும் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்காக 33 பேருக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பு வகுப்பில் பால், பழம்

காலை 9 மணி முதல் 4.30 மணி வரை இவர்களுக்கு வழக்கமான பள்ளி நேரம். பள்ளி முடிந்த பிறகு, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் மாலை 6.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. 2 மணி நேரம் நடக்கும் சிறப்பு வகுப்பில் மாணவிகளுக்கு பால், பழம் ஆகிய ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளுக்காக கணிதப் பாடத்துக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் , ஆங்கில மொழிப் பாடத்துக்கு 2 சிறப்பு ஆசிரியர்கள் மாலை நேரங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தோல்வி என்பதே இல்லை

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளாகவே இந்தப் பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவிகள் பொதுத் தேர்வில் தோற்றதில்லை. 300, 400-க்கு அதிகமாகவே மாணவிகள் மதிப்பெண் எடுக்கின்றனர்’’ என்றார்.

இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெறாமல் போகும் மாணவிகளும் சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். 10-ம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி படிக்க விரும்பும் மாணவிகள் ‘சேவா சதன்’ போன்ற பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in