Published : 29 Sep 2014 11:53 AM
Last Updated : 29 Sep 2014 11:53 AM

வாசகர்களே ஆசிரியர்களாக இருக்கும் ஒரே பத்திரிகை - புதுச்சேரி வாசகர் திருவிழாவில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பாராட்டு

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பேசிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘தி இந்து தமிழில் வாசகர்களே ஆசிரியர்களாக இருக்கின்றனர்’ என்று பாராட்டு தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் ஓராண்டு நிறைவை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் ஜவஹர்லால் நேரு அரங்கில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ‘தி இந்து’ தமிழ் ஆசிரியர் கே. அசோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி கலந்து கொண்டு பேசினார். வாசகர்களுடன் ஆசிரியர் குழுவினர் கலந்துரையாடும் விதத்தில் அமைந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாக எழுத்தாளர் கி.ராஜநாராயணன், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், பேராசிரியர் முனைவர் கே.ஏ. குணசேகரன், தமிழறிஞர் அருளி ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் கி.ராஜநாராயணன் பேசும்போது, ‘நான் ஒரு எழுத்தாளன். பேச்சாளன் அல்ல. ஜீவானந்தம் போலவோ, வாரியார் போலவோ என்னால் பேச முடியாது. அதுபோல, எனக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட தெரியாது. ‘தி இந்து’வுக்கு சங்கீத பாரம்பரியம் உண்டு. மேலும், ‘தி இந்து’ தமிழ் ஆரம்பிக்கப்பட்ட செப்டம்பர் 16-ம் தேதி என்பது எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம். நான் சிறுவனாக இருந்தபோது சுதேசமித்திரன் பார்த்து இருக்கிறேன். ஆனால், வாசிக்கத் தெரியாது. அந்த நாளிதழில்தான் பாரதியார் பணிபுரிந்தார். அதேபோல் பல்வேறு பத்திரிகைகளில் இருந்து பல எழுத்தாளர்கள் வெளிவந்தார்கள்.

பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி, சொக்கலிங்கம், ப. சிங்காரம் என பல்வேறு நாளிதழ்களில் இருந்து நாவலாசிரியர்கள் உருவானார்கள். அந்த காலத்திலிருந்து பல்வேறு செய்தித்தாள்களைப் படித்து வருகிறேன். பத்திரிகை நடத்த மொழி அவசியம். மக்களுக்காக பத்திரிகை நடத்த வேண்டும். ‘தி இந்து’ தமிழ் பார்த்ததும் பரவசமாகிவிட்டேன்.

தமிழுக்காக பலரும் உருகி, உருகி பேசுகிறோம். ஆனால், படைப்பாளிகளாக என்ன செய்கிறோம் என்பது கேள்விக்குறிதான். பத்திரிகையாளன்தான் தமிழுக்காக வாழ்வை இழக்கிறான். இறக்கிறான். தேசபக்தர்கள் இறந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், பத்திரிகைகளில் இருப்போருக்கும் படைப்பாளிகளுக்கும் எந்த அரசும் உதவவில்லை. பத்திரிகை துறையில் வழக்கமாக ஆசிரியர்கள்தான் முடிவு எடுப்பார்கள்.

ஆனால், ‘தி இந்து’ தமிழில் வாசகர்களே ஆசிரியர்களாக உள்ளனர். இதுபோன்ற நிலை வேறெங்கும் இல்லை. ஒவ்வொரு நாளும் மதியம் வரை எனது நேரத்தை தமிழ் இந்து எடுத்துக் கொள்கிறது. நம்முடைய நாட்டுப்புறக் கலைகளில் பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கு இருந்துதான் உண்மையான இலக்கியம் வந்தது’ என்று குறிப்பிட்டார்.

விழாவில் தமிழறிஞர் அருளி பேசும்போது, ‘அறிவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் பகுத்தறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார்கள். அறிவு என்றால் வெட்டுதல், வெட்டிப் பார்த்தல் என்று பொருள்படும் . இதற்கான பொருள் தெரியாமலேயே பகுத்தறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார்கள். அனைத்து மொழிகளுக்கும் முதல் மொழி தமிழ். பின்னர் பல மொழிகள் தோன்றியதால் தம் மொழி என தன் மொழியை அழைக்கத் தொடங்கினார்கள். அது மருவி தமிழ் என்ற வார்த்தை உருவானது.

எந்த குழந்தையாக இருந்தாலும், முதலில் ‘அய்’ என்றே அழைக்கும். அதுவே ஆய் எனவும் பின்னர் ஆயி என்றும் மருவியது. தன் ஆய் என்ற சொல்லே நாளடைவில் தாய் ஆனது. நல்ல தாய் என்பதே நற்றாய் என்றானது. இதை 2700 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் கூறியுள்ளது’ என்றார்.

மது விழிப்புணர்வு தொடர்

நிகழ்ச்சியில் ‘தி இந்து’ தமிழ் ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, ‘காலை உணவுக்குப் பிறகு நாளிதழுடன் உள்ள பந்தம் முடிவதை மாற்றி, வாசகர் வாழ்க்கையோடு வாழ்நாள் முழுவதும் தொடர்பு கொண்டதாக நாளிதழ் இருக்க வேண்டும் என செயல்படுகிறோம். ஊடகங்கள் நல்லவற்றை ஆதரிக்கும்போது நல்லவை வளரும். வாசகர்கள் கருத்து அறிய ‘உங்கள் குரல்’ பகுதியை தொடங்கினோம். மேலும் வாசகர்களிடம் இருந்து தினமும் 40-க்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள் வருகின்றன.

அவற்றை தேர்வு செய்வதே மிகவும் கடினமாக உள்ளது. இந்த கூட்டத்தில் வாசகர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் எங்களை செதுக்கிக் கொள்ள அவர்களுக்கு நாங்கள் அளித்த உளி. மது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விரைவில் ‘தி இந்து’ தமிழில் ஒரு தொடர் தொடங்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய, ‘தி இந்து’ குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி. பாலசுப்ரமணியன் பேசும்போது, "கடந்த 1878, செப்டம்பர் 20-ம் தேதி ஆங்கில ‘இந்து’ தொடங்கப்பட்டது. 136 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘தி இந்து’ தொடங்கப்பட்டது. தமிழ் இந்து இணைப்புகளை சேகரித்து வைப்பவர்கள் பலர் உள்ளனர். நடுப்பக்க கட்டுரைகள் ஆங்கில நாளிதழுக்கு இணையாக உள்ளன’ என்றார்.

புதுச்சேரியில் வாசகர் திருவிழாவை, ‘தி இந்து’ தமிழுடன் லலிதா ஜுவல்லரி, ராம்ராஜ் குழுமம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், புதுவை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. விழாவில், ‘தி இந்து’ தமிழ் ‘சிஓபி’ கவிதா முரளிதரன் ஏற்புரையாற்றினார். புதுச்சேரி ‘தி இந்து’ முதுநிலை மண்டல மேலாளர் சரவணகுமார் நன்றி கூறினார். என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சரியான பாதையில் ‘தி இந்து’ தமிழ்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வாசகர் திருவிழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறும்போது, ‘தி இந்து தமிழ் நாளிதழ் வாசகர் திருவிழாவுக்கு வரும்போது முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சந்தித்தேன், அவர், தி இந்து தமிழ் குறித்து என்னிடம் கூறி விழாவில் கண்டிப்பாக பங்கேற்குமாறு அறிவுறுத்தினார். இந்த நாளிதழில் தினந்தோறும் வெளியாகும் இணைப்புகள் குறித்தும் அவர் என்னிடம் கூறினார். இணைப்புகளை சேகரித்து வைத்துள்ளதாக வாசகர்கள் தெரிவித்தனர். அந்த அளவுக்கு தமிழ் மக்களிடம் ‘தி இந்து’ தமிழ் சென்றடைந்துள்ளது.

அதுவே வளர்ச்சிக்கு அடிப்படை. புதுச்சேரியில் இந்த இதழை தொடங்கி வைத்தேன். ஓராண்டு நிறைவடைந்துள்ளது. வாசகர்களின் பங்கேற்பு பாராட்டின் மூலம் சரியான பாதையில் இந்த நாளிதழ் செல்வது உறுதியாகி இருக்கிறது. நாளிதழ்களிடம் நான் எப்போதும், புதுச்சேரி செய்திகளை தனியாக ஒரே பக்கத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். தெளிவாகவும், சரியாகவும் தமிழ் இந்துவில் செய்தி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான பல விஷயங்கள் வெளியாகிறது. அவர்களின் வாசிப்பு பழக்கமும் மேம்படுகிறது.

இதனால் பயனுள்ளதாக உள்ளது. பாரம்பரியமான ஆங்கில நாளிதழ் குழுமத்தில் இருந்து தமிழில் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கிறேன்’ என்றார்.

தனித்துவமான சொல்லாடல்: பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்

விழாவில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் கூறும்போது, ‘தமிழால் இணைவோம்’ என்ற அடைமொழியுடன் வாசகர்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கோடு மத்திய அரசு ஒருபுறமும், தெருக்கள்தோறும் ஆங்கிலப் பள்ளிகள் என்று மறுபுறமும் உள்ள இந்த சூழ்நிலையில், ஆங்கிலப் பின்புலம் கொண்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தமிழை வளர்க்கிறது.

இதை, நாம் சொல்லாவிட்டாலும் நூறாண்டுகளுக்குப் பின் அப்போதுள்ள தமிழ் சந்ததியினர் கூறுவார்கள். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ‘தி இந்து’ தமிழில் மொழிநடை மிகச்சிறப்பாக உள்ளது. உதாரணமாக, புதுப்பேட்டை எனும் பைக் பேட்டை, நீரிலிருந்து நிலத்துக்கு, சுட்டது நெட்டளவு போன்ற சொல்லாடல் தமிழ் இந்துவுக்கே உரிய தனித்துவம். தமிழை பயன்படுத்தும் விதம், ஆசிரியர் குழுவின் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துகிறது. முன்பு, மாதத்துக்கு ஒரு சிறு பத்திரிகை வெளிவரும்.

அதில் பல அரிய தகவல்கள் இடம்பெறும். அதுபோன்ற தகவல்களை தினந்தோறும் வழங்கிக் கொண்டிருக்கிறது, ‘தி இந்து’. கருத்துப் பேழை, தேசம், மாநிலம், ஊர்வலம் போன்று பல்வேறு தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு தலைப்பிலேயே செய்திகளை சொல்லி விடுகிறார்கள். இந்த தலைப்புகள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகின்றன’ என்றார்.

முதல் வாசகர்களுக்கு கவுரவம்

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு வாசகர் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே வாசகர்கள் வரத் தொடங்கினர். முதல் வாசகராக காலை 6.30 மணிக்கு திண்டிவனத்தைச் சேர்ந்த ஆ.செல்வின் வந்தார். அதையடுத்து புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சொ. வெங்கடேசன் வந்திருந்தார். இருவரும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் வாசகர் குரல்

வாசகர் திருவிழாவில் வாசகர்கள் சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பேசிய திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு பகுதியைச் சேர்ந்த வாசகரும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான காசி மனோகரன் கூறும்போது, ‘உயிர் மூச்சு எனும் பகுதி மூலமாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ‘தி இந்து’ ஏற்படுத்தி வருகிறது. இந்த உலகில் 3-வது உலகப் போர், நீர் காரணமாக உருவாகும் நிலைமை உள்ளது.

எனவே, மரம் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை உயிர் மூச்சு பகுதி மூலமாக ஏற்படுத்த வேண்டும். எனது பள்ளியில் தமிழ் இந்து நாளிதழை வரவழைத்து மாணவர்களைப் படிக்கத் தூண்டி வருகிறேன். படித்துவிட்டு அதை பாதுகாத்து வருகிறேன். ஏனெனில், அடுத்தடுத்து அந்த பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அவை பயன்படும்’ என்றார்.

அறிவுப் பசியை ஏற்படுத்தி இருக்கிறது ‘தி இந்து’: தங்கர் பச்சான்

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது, ‘நான் சிறு வயதில் நாளிதழ்களைப் பார்க்கும்போது கொலை, விபத்து போன்ற செய்திகள் சமுதாயத்துக்கு தேவையா? வேறு செய்திகள் எதுவும் இல்லையா? என்ற எண்ணற்ற கேள்விகள் என் மனதில் ஏற்பட்டது உண்டு.

கடந்த 70 ஆண்டுகளில் மனிதன் பெற்ற வளர்ச்சிக்கு ஏற்றவாறு செய்திகளின் தன்மை வளரவில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தினோம். நாளிதழ் பார்த்தோம் என 70 ஆண்டுகளாக நாளிதழை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், தமிழ் இந்து அப்படியல்ல. அறிவுப் பசியை ஏற்படுத்தியிருக்கிறது. நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய பல விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது.100 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில நாளிதழை நடத்தி வந்த இந்து குழுமம், நமது மொழியில் பத்திரிகையை கொண்டு வந்திருக்கிறது.

எண்ணற்ற தகவல்களுடன் வெளியாகும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழை தினமும் எப்போது படித்து முடிப்பது எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தகவல்கள் உள்ளன. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான இருவரிடம் எடுத்துக் கூறி, அவரவரின் முன்னேற்றத்துக்கு தமிழ் இந்துவை படிக்கச் செய்வதே பெரிய அறம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x