

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கைதான இலங்கை மீனவர்களை ராமநாதபுரம் நீதிமன்றம் நவம்வர் 15ம் தேதி வரை காவலில் வைக்க உத்திரவிட்டது.
அக்டோபர் 30 அன்று இலங்கை புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பிட்டி மற்றும் சிலாபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் 4 படகுகளில் கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் இருந்து 60 கடல் நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக கடலோர காவல்படைக்கு தகவல் வந்தது.
தகவலறிந்த தூத்துக்குடி கடலோர காவல் படையினர் அந்தோனி, டென்சிஸ் பர்னாந்து, கெனட் பெரேரா, பிரதீப் சாந்தா, ஜேசிங்க பிரசாந்தா உள்ளிட்ட இலங்கை 24 மீனவர்களையும், 4 படகுகளையும், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும் கடலோர காவல்படை தூத்துக்குடி தரவைகுளம் காவல்துறையினரிம் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்திய எல்லைக்குள் உரிய ஆவணம் இன்றி நுழைந்ததால் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தினர்.
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மீனவர்கள் காற்றில் திசைமாறி வந்ததாக தெரிவித்தனர். மீனவர்களை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிபதி வேலுச்சாமி மீனவர்கள் 24 பேரையும் நவம்பர் 15 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார். பின்னர் இலங்கை மீனவர்கள் 24 பேரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.