வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிக்கும்போது ராம மோகன ராவ், சேகர் ரெட்டிக்கு புதிய நோட்டுகள் கிடைத்தது எப்படி? - வங்கி அதிகாரி விளக்கம்

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிக்கும்போது ராம மோகன ராவ், சேகர் ரெட்டிக்கு புதிய நோட்டுகள் கிடைத்தது எப்படி? - வங்கி அதிகாரி விளக்கம்
Updated on
2 min read

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோருக்கு எவ்வாறு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தன என்பது குறித்து வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்பு வெளி யிட்ட பிறகு வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதம் ஆகியும் பொதுமக்கள் வங்கிகளில் இருந்து பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேசமயம், வருமானவரித் துறை ரெய்டில் பிடிபடும் நபர் களிடமிருந்து கோடி கோடியாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் புதிய ரூபாய் நோட்டுகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, அண்மையில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து ரூ.147 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 34 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளன. அதேபோல், தமிழக அரசு முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் வரு மானவரித் துறை சோதனையில் பிடிபட்டது. இதில், ரூ.23 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களுக்கு மட்டும் எவ்வாறு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத் திருக்கும் என்ற சந்தேகமும், ஆச்சரியமும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வருமானவரித் துறை சோதனை யில் புதிய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்து பிடிபட்டவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பிரிண்டிங் பிரஸ் அல்லது தனிநபர் மூலம் புதிய நோட்டுகள் சென்றிருக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் வெளி யிட்டிருந்த அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார். ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து அவர் அறிந்து வைத்துள் ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கருவூலத்திலேயே கள்ள நோட்டுகள் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. எனவே சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் போன்ற முக்கிய நபர்களுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து அதிகாரிகள் சிலரது உதவியுடன் சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகள் சென்றிருக்கலாம்.

இதைத்தவிர, ஊனமுற்றவர் களுக்கான நிதியுதவிகள் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகள் ஒன் றரை கோடி ரூபாயை அரசுக்கு வழங்கி உள்ளன. இவ்வாறு வழங் கப்பட்ட பணமும் தனிநபர்களுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அத்து டன், வங்கிகளில் நடைமுறைக் கணக்கில் இருந்து வாரம் ஒன் றுக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஒரு கணக்கில் இருந்து 4 வாரத்துக்கு பணம் எடுத்தாலே ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். அதுபோல் இத்தகைய நபர்கள் எத்தனைக் கணக்கு வைத்துள்ளார்களோ அதற்கேற்றார் போல வங்கியில் இருந்து பணம் எடுத்திருக்கலாம். கமிஷன் அடிப்படையில் ஆட்களை வைத்தும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம்.

தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்து பணம் மாற்றப்பட்டுள்ளதாக பகிரங்கமாக தகவல் வெளியா னது. அதுபோல போலி கணக்கு கள் தொடங்கப்பட்டும் பணம் மாற்றப்பட்டிருக்கலாம். மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறி விப்பை கடந்த மாதம் 8-ம் தேதி வெளியிட்டது. அதற்கு முன்பாகவே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அப் பணத்தை உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டது. அவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்ட பணம் கூட இத்தகைய நபர்களுக்கு சென்றிருக்கலாம்.

அதேபோல், வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்பும் பணி தனியார் ஏஜென்சிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஏஜென்சிகளுக்கு வங்கிகளில் இருந்து வழங்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி போன்ற ஆட்களுக்குச் சென்றிருக்கலாம். பெங்களூருவில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக அண்மையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் வாகனத்தோடு மாயமானது என்பது இதற்கு உதாரணம்.

வங்கிகளில் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து சிறப்பு தணிக்கை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகளில் வங்கிகள் ஈடு பட்டிருந்தால் அவற்றை எளிதாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு தாமஸ் பிராங்கோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in