பல்நோக்கு மருத்துவமனை: கருணாநிதி அறிக்கை

பல்நோக்கு மருத்துவமனை: கருணாநிதி அறிக்கை
Updated on
1 min read

வரும் 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகம் அமைக்கப் போவதாகக் கூறுவார் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, `32 ஆண்டுகளுக்கு முன்பு, இதே கடலூர் கூட்டத்தில்தான், எம்.ஜி.ஆர்., என்னை அழைத்து, பெண்ணின் பெருமையைப் பற்றி பேச வைத்தார்’ என்று கூறியுள்ளார்.

அதே எம்.ஜி.ஆர்., தான் மறைவதற்கு சில நாள்களுக்கு முன், `வயதுக்கும் தகுதிக்கும் மீறிய பொறுப்பில் ஜெயலலிதாவை உட்கார வைத்தது என்னுடைய தவறு. என்னுடைய அனுமதி இன்றி, டெல்லியில் சில முக்கியத் தலைவர்களைச் சந்தித்து, கட்சியைப் பற்றி பலவீனமாக ஜெயலலிதா பேசியதை அறிந்து வைத்துள்ளேன்’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை எந்த அளவுக்கு அதிமுக ஆட்சியில் இந்த மூன்றாண்டுகளில் உயர்ந்து விட்டது என்பதை நான் பட்டியலிட்டிருந்தேன். அதற்குத்தான் கபட நாடகம் போடுவதாக அவர் கூறியுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில், விலைவாசி என்ற வார்த்தையே ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வுக்கு தமிழகத்தை ஆளும் அரசுதானே காரணம் என்றால், “மொத்த விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசும், திமுகவும்தான் காரணம்” என்று முதலமைச்சர் பேசுவது என்ன நியாயம் என்பதை தமிழக வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்குவதற்காக, ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட மாளிகையில், பல்நோக்கு மருத்துவமனை செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டார். மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகும், 40 பேர்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2016-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேறொரு முதல்வர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகம் அமைக்கப் போவதாகக் கூறுவார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in