தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்: செப் 11, 25 தேதிகளில் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்: செப் 11, 25 தேதிகளில் சிறப்பு முகாம்
Updated on
1 min read

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர்கள், இரட்டை பதிவுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, தேர்தல் வரை செம்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. 3.50 லட்சத்துக்கும் அதிகமான இரட்டை பதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான நிகழ் வான, வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள் இம் மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியல் படி, தமிழகத்தில் 2 கோடியே 88 லட்சத்து 27 ஆயிரத்து 134 ஆண், 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 222 பெண், 4 ஆயிரத்து 598 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது நடக்கும் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இது தவிர, பெயர், முகவரி திருத்தங்கள், முகவரி மாற்றம், புதிய புகைப்படம் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘ வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமும் இதை பார்க்கலாம். இதைக் கொண்டு, திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இம்மாதம் 30-ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங் கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 மற்றும் 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் வாக்குப்பதிவு மையங் களில் நடத்தப்படும். அதில் பங்கேற்றும் விண்ணப்பங்களை வழங்கலாம். உள்ளாட்சித் தேர் தலை பொறுத்தவரை, ஏற்கெனவே பட்டியல் வழங்கப்பட்டுவிட்டது. திருத்தங்கள் இருப்பின் அவை பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in