

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மற்றும் கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென் பெண்ணை ஆற்று கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென் பெண்ணையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் நீர்மட்டம் 42.5 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. அணைக்கு விநாடிக்கு 2120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு செல்லும் பூதிநத்தம், தொரப்பள்ளி, பேரண் டப்பள்ளி, கோபசந்திரம், பாத்த கோட்டா உள்ளிட்ட கிராமங் களில் உள்ள தரைபாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வ தால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலத்தை கடக்க வேண் டாம் என கிராம மக்களுக்கு அதிகா ரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல கிருஷ்ணகிரி அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 52 அடியில், 51.01 அடிக்கு நீர் எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அணையின் கீழ் மதகு வழியாக 1500 கனஅடி தண்ணீர் நேற்று காலை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோரம் தாழ் வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லு மாறு பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்பட்டுள்ள நீர் இன்று கிருஷ்ணகிரி அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதான மதகுகளில் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த மழை
இதனிடையே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் மலை கிராமங்களில் மக்கள் கடும் அவதி வுற்றனர். மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டது. ஆனால் காலை 9 மணிக்கு பிறகு மழை குறைந்து, வெயில் காணப்பட்டது.
மழை பதிவு (மில்லி மீட்டர் அளவில்)
நேற்று காலை 8 மணி நிலவரப்படி தேன்கனிக்கோட்டை - 64.2, தளி - 27, அஞ்செட்டி - 24, ராயக்கோட்டை - 27, ஒசூர் - 13, சூளகிரி - 3, கிருஷ்ணகிரி - 1.2, போச்சம்பள்ளி - 3 என மழை பதிவாகியிருந்தது.
சூளகிரி பகுதியில் கனமழை யால் மாரண்டப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தம்மா என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் பயிர்கள், காய்கறிகள் நீரில் மூழ்கி அழுகின.