

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடைபெற்ற கார்கள் இல்லாத ஞாயிறு விழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றால் வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
‘தி இந்து’ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் “கார்கள் இல்லாத ஞாயிறு” விழா காலை 6 முதல் 9 மணி வரை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவின்போது கடற்கரை சாலையில் மோட்டார் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த சாலைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று, அவர்களுக்கு பிடித்த வாலிபால், வட்டு எறிதல், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பார்வையாளர்களை கவரும் வகையில் இசை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடைபெற்றது.
ஐஎம்எம்ஐ லைஃப் என்ற இதயநோய் சிகிச்சை மருத்துவ மனை சார்பில், மாரடைப்பு ஏற்பட் டால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும், இதய நோய்களை தவிர்க்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங் கப்பட்டன. மேலும் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இது பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து ஐஎம்எம்ஐ லைஃப் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, கார்கள் இல்லாத ஞாயிறு விழாவில் பங்கேற்ற முதியவர் ஜவகர் கூறும்போது, ‘‘இந்த விழாவில் வாரந்தோறும் விளையாட்டு அதன் மூலம் உடற்பயிற்சி செய்யதான் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, உடற்பயிற்சியுடன் கூடிய மருத்துவ ஆலோசனையும் வழங்குவது என்னைப் போன்ற முதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கடற்கரை சாலையில் முதியோர்கள்தான் அதிக அளவில் காலையில் உடற்பயிற்சி செய்ய வருகின்றனர். அவர்களுக்கு இது போன்ற இதயநோய் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் உதவியாக இருக்கும். இது போன்ற பல்வேறு விதமான மருத்துவ ஆலோசனைகளை வாரந்தோறும் வழங்க வேண்டும்’’ என்றார்.