புத்தூரில் தீவிரவாதிகள் வேட்டை: 2 பேர் சுற்றிவளைத்து கைது

புத்தூரில் தீவிரவாதிகள் வேட்டை: 2 பேர் சுற்றிவளைத்து கைது
Updated on
2 min read

அத்வானியை கொல்ல முயன்றது உட்பட பல கொலைகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தமிழகத்தை கலக்கி வந்த 2 தீவிரவாதிகளை 'ஆபரேஷன் புத்தூர்' என்ற அதிரடி நடவடிக்கை மூலம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் துப்பாக்கி சண்டையால் அப்பகுதியில் பெரும் பீதி நிலவியது. மதுரை அருகே பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்து அத்வானியை கொல்ல முயற்சி, பெங்களூர் பா.ஜ.க. அலுவலகம் குண்டு வெடிப்பு, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, போலீஸ் பிடியில் சிக்கிய பக்ரூதின் அளித்த தகவலின்படி, தமிழக சிறப்புப் புலனாய்வு போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் விரைந்தனர். அங்குள்ள கேட் வீதியில் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சுற்றி வளைத்தனர். திடீரென கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். தீவிரவாதிகள் தப்பிவிடாமல் இருக்க துப்பாக்கி யால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட அவர்கள் பதிலுக்கு போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்பும் மாறிமாறி சுட்டுக்கொண்டது. இச்சம்பவத்தின்போது அங்கிருந்த ஒரு துப்பாக்கி, 2 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது புலனாய்வுப்பிரிவு ஆய்வாளர் லட்சுமணன், காவலர் ரமேஷ் ஆகியோரை தீவிரவாதிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் போலீசாரை வெளியே தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டனர். இச்சம்பவம் அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதுகுறித்த தகவல் சென்னை சிபிசிஐடி தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையிலான அதிரடிப்படை புத்தூர் வந்தது. அதேபோல் ஆந்திர மாநில டிஜிபிக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் அம்மாநில எஸ்பி கிரண்டி ராணா டாடா தலைமையில் திருப்பதியில் இருந்து ஆக்டோபஸ் கமாண்டோ படையும், ஆயுதப்படையும் வந்தது. இதனிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த லட்சுமணன், ரமேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் வீட்டில் குண்டுகள் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி அதிகாலை 5 மணிக்கு கேட் தெரு, மோதார் தெரு, முஸ்லிம் தெருவில் வசிக்கும் மக்களை வெளியேற்றினர். இரு மாநில போலீசார் சுமார் 500 பேர் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் அப்பகுதியை கொண்டு வந்தனர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள் பரபரப்பாக கூடினர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. எஸ்பி அன்பு செல்போன் மூலம் தீவிரவாதிகளிடம் சரண் அடையுமாறு கூறினார். அதற்கு அவர்கள், 'எங்களின் ஆட்கள் 30 பேர் இங்கு இருக்கிறார்கள். எங்களை தாக்கினால் புத்தூரையும், தமிழகத்தையும் பதிலுக்கு தாக்குவோம்' என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை அதிரடியாக கைது செய்வது என முடிவு செய்தனர். அதற்காக போலீசார் வியூகம் அமைத்தனர். இதன்படி, கமாண்டோ படை தீவிரவாதிகளின் வீட்டை நெருங்கியது. பின்னர் வீட்டின் மாடியில் துளை போட்டனர். அவர்களை வெளியேற்றுவதற்காக துவாரத்தின் வழியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போதும் அவர்கள் வெளியே வரவில்லை. இதையடுத்து கண்ணீர் புகை குண்டை வீட்டுக்குள் வீசினர். வீடு முழுவதும் புகை சூழ்ந்து உள்ளே இருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார் முதலுதவிக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உள்ளே இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை அறிந்து கொண்டனர். இதையடுத்து கமாண்டோ படையினர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாங்கள் சரண் அடைவதாக அறிவித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 11 மணி நேரம் 40 நிமிடம் சினிமா காட்சிகள் போல நடந்த பரபரப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்து, அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் மதியம் 3 மணிக்கு மேல் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in