

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லேயே என்று சத்தீஸ்கரில் இருந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
செல்போன் நெட்வொர்க் மற்றும் லேண்ட் லைன் இணைப்புகள் முற்றிலும் செயலிழந்து மீட்பு மற்றும் நிவாரண பணி தொடர்பான தகவல்களைக்கூட பரிமாற்றம் செய்ய முடியாத நிலை இருந்தது.
அந்த நேரத்தில் வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இணைந்து பெங்களூரில் இதற்கென பிரத்யேக தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி செய்திகளை பரிமாற முயற்சி மேற்கொண்டோம். முதல் நாளில் 500 அழைப்புகள் வந்தன. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கியது. 3 நாட்களில் 10 ஆயிரம் அழைப்புகள் வந்தன.
வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் சமயங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான தகவல்கள், முக்கிய தொலைபேசி எண்கள், மருத்துவர்கள் விவரம் போன்றவை அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது இந்த பெருவெள்ளத்தால் கற்றுக்கொண்ட ஒரு பாடம். எனவே, மேற்கண்ட விவரங்களுடன் கூடிய தகவல் தொகுப்பு (Web Portal), மொபைல் அப்ளிகேஷன் ஆகியவற்றை உருவாக்கி வருகிறோம். தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
என்று ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ்பால் மேனன் கூறினார்