

மாயமான விமானத்தை கண்டுபிடிப்பது சிரமம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 22-ம் தேதி 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏஎன்-32 ரக ராணுவ சரக்கு விமானம் நடுவானில் மாயமானது. வங்கக்கடலில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இணைந்து 10 நாட்களாக தேடியும், விமானம் குறித்த தடயம் கிடைக்காததால், கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. ஒரு நீர்மூழ்கிக் கப்பல், ‘சாகர்நதி’, ‘சமுத்ரா ரத்னாகர்’ என்ற அதிநவீன கப்பல்கள் கடலுக்கு அடியில் விமானத்தை தேடி வருகின்றன.
இந்நிலையில், ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விபத்தில் சிக்கும் விமானத் தின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க ‘எமர்ஜென்சி லொக்கேட் டர் டிரான்ஸ்மிட்டர்’ (இஎல்டி) என்ற கருவி அனைத்து விமானங் களிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கருவி தானாக இயங்காது. அசம்பாவிதம் ஏற்படும் சூழ் நிலையில், விமானிதான் ‘ஆன்’ செய்ய வேண்டும். அதன் பின்னர் அதில் இருந்து சிக்னல் வரும். அந்த சிக்னல்களை வைத்துதான் விமானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்.
அதில் இருக்கும் பேட்டரிகள் 7 நாட்களுக்கு மேல் செயல்பட வாய்ப்பு இல்லை. இதனால், இஎல்டி கருவியில் இருந்து வரும் சிக்னலை வைத்து விமானத்தைக் கண்டுபிடிக்க இயலாது. தவிர, அசம்பாவித சூழலில் இஎல்டி கருவியை விமானி இயக்கி இருப்பாரா என்ற சந்தேகமும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.