

இந்திய கடலோர காவல்படை வரும் 2020-க்குள் 3-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். மேலும், புதியதாக 200 கப்பல்கள், 100 விமானங்கள், 36 ஹெலிகாப்டர்களை சேர்க்க உள்ளோம் என கிழக்கு கடலோர காவல் படை ஐஜி ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் கடலோர காவல் படையாளர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீரர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
இது தொடர்பாக கிழக்கு கடலோர காவல் படை ஐஜி ராஜன் பர்கோத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் மீன்பிடித்துச் செல்லும்போது நமது எல்லையை தாண்டக்கூடாது என்றும் கடலுக்குள் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு சாதனங்களையும் எடுத்து செல்ல வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். மீனவர்களின் பாதுகாப்பிற்காக கடந்த ஆண்டில் மொத்தம் 330 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய கடலோர காவல் படை உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. வரும் 2020-க்குள் 3-ம் இடத்துக்கு முன்னேறி விடும். புதியதாக 200 கப்பல்கள், 100 விமானங்கள், 36 ஹெலிகாப்டர்களை சேர்க்க உள்ளோம். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட 130 மீட்பு சம்வங்களில் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த 86 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 1-ம் தேதி தனது 40-வது கடலோர காவல் படை யினரின் கொண்டாடத்தையொட்டி கடலோர காவல் படை வார விழா கொண்டாடப்படுகிறது. இன்று நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் கடலில் விழுந்துள்ளவர்களை எப்படிக் காப்பாற்றுவது?, கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலைப் பாதுகாத்தல், தீ விபத்து தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.