சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்கிறார் சி.விஜயபாஸ்கர்

சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்கிறார் சி.விஜயபாஸ்கர்
Updated on
1 min read

தமிழக சுகாதாரத் துறையின் புதிய அமைச்சராக சி.விஜயபாஸ்கர், இன்று பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக விஜயபாஸ்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் கே.ரோசய்யா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

10-வது முறையாக மாற்றம்:

தமிழக அமைச்சரவை 10-வது முறையாக கட்நத 30ம் தேதி மாற்றப்பட்டது. சுகாகாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றப்பட்டார்.

அதிமுக அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை 9 முறை மாற்றப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை(அக்.30- ஆம் தேதி) முடிவடைந்த ஒரு மணி நேரத்தில் அமைச்சரவை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 'விராலிமலை தொகுதி உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைக்கு ஆளுநர் ரோசய்யா அனுமதி வழங்கியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டது.அமைச்சரவையில் இது பத்தாவது மாற்றம் ஆகும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைச் செல்வன், கடந்த ஜூன் 17-ம் தேதி நீக்கப்பட்டார். அதன்பிறகு, அத்துறையை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகனான விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ். முடித்தவர். இவர், கடந்த 2001-ல் முதல்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர், கலகலப்பாக பேசுவார். நகைச்சுவையுடன் கதைகளைக் கூறி எதிர்க்கட்சியினரை விமர்சிப்பார். இந்தக் கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமையன்று இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்ததால் திமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in