

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து கூறியதாவது:
"அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு பின்னர் தமிழகத்தின் நிலை மாறி உள்ளது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் அதிமுக-வினரிடையே எழுந்துள்ள அதிருப்தி, அதன் காரணமாக நடக்கும் தொடர் போராட்டங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, நிலைமை மிக விரைவில் கட்டுக்குள் வர வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்றுக் கட்சி திமுக மட்டுமே என்ற நிலை எப்போதோ மாறிவிட்டது. அந்த இடத்தை பிடிக்க திமுக நினைத்துக் கூட பார்க்க முடியாது. தற்போது இங்கு உள்ள வெற்றிடத்தை காங்கிரஸால் நிரப்ப முடியும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும். அந்த வெற்றி நாளுக்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
அதே போல, சிறுபான்மையினருக்கு நல்லது செய்வதாக கூறிய பாஜக தலைமையிலான மத்திய அரசு அவர்களுக்காக எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை. மாறாக முஸ்லிம்கள் 'லவ் ஜிகாத்' செய்வதாக சிறுபான்மையின மக்கள் மீது தேவையற்ற பழி சுமத்துகிறது.
வேறு சமூகத்தையோ சாதியையோ சேர்ந்த பெண்கள் அல்லது ஆண்கள் மாற்று பின்னணியில் உள்ள ஒருவரை ஏன் திருமணம் செய்ய கூடாது? பாஜகவைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் தலைவர்கள் இந்து பெண்களை மணந்துள்ளனர். அப்போது அவர்கள் என்ன 'லவ் ஜிகாத்'-ல் ஈடுபட்டவர்களா?" என்றார்.