

பழநி நகரம் சுகாதாரக்கேட்டின் பிடியில் சிக்கித்தவிப்பதால், மக்கள் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரில் கடந்த ஒரு மாத மாக காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழநி அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்ற சிலர், மேல் சிகிச்சைக்காக மதுரை, கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
வறட்சியான வானிலை நிலவிவரும் நிலையில், வேகமாக காய்ச்சல் பரவுவதற்கு நகரில் ஏற்பட்டுள்ள சுகாதாரச்சீர்கேடு முக்கிய காரணமாகும். பழநி நகரின் மத்தியில் அமைந்துள்ள வையாபுரி கண்மாயில் ஹோட்டல் கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குகிறது. கண்மாய் கரையில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. அங்கு பன்றிகள் நடமாட்டம், கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து பழநியை சேர்ந்த டி.பகவதிராஜா கூறுகையில், “குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கும் பயன்பட்டு வந்த வையாபுரி கண்மாயை கழிவுநீர் குட்டையாக்கிவிட்டனர். நகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகளில் அக்கறை காட்டாமல் உள்ளது. வையாபுரி கண்மாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தால்தான் இப் பகுதியில் சுகாதாரத்தைப் பேண முடியும்” என்றார்.
கலையம்புத்தூர் கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பராமரிப்பில்லாத கிணறு.
மாணவி பலி
அதேபோன்று பழநி அருகே கலையம்புத்தூரில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாழடைந்த கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அனிதா மர்ம காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.
காய்ச்சல் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பழநி நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் வடிவேல், பழநி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அவர் கூறுகை யில், “நகர் பகுதியில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள நீரில் உருவாகும் கொசுப்புழுக்களை அழிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
போதிய நடவடிக்கை இல்லை
பழநி நகரில் சுகாதாரச்சீர்கேடு அதிகரித்துள்ள நிலையில், அதை சீரமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தற்போதுதான் பன்றிகளை அப்புறப்படுத்தவும், கொசு மருந்து அடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை.
இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு குறித்த உண்மை நிலவரத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதால், மக்களிடையே அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை. இதனால், காய்ச்சல் தடுப்பு பணி களில் சுணக்கம் ஏற் படுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.3-ம் தேதி தொடங்குகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ள நிலையில், திருவிழா தொடங்கும் முன்பு சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டால்தான் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். அதற்கு நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பழநி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டி.பகவதிராஜா