Published : 15 Jan 2014 17:00 pm

Updated : 06 Jun 2017 18:11 pm

 

Published : 15 Jan 2014 05:00 PM
Last Updated : 06 Jun 2017 06:11 PM

மதுரை: அழியும் நிலையில் தமிழர் அடையாளச் சின்னங்கள்

மதுரையிலுள்ள அடையாளச் சின்னங்களான தமிழன்னை, தமிழறிஞர்களின் சிலைகள் உரிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. எம்ஜிஆர் அமைத்த இவற்றை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரை மண்ணுக்கு உண்டு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1981 ஜனவரியில் மதுரையில் 5-வது உலகத்தமிழ் மாநாட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தலைவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், அவர்களின் மார்பளவுச் சிலைகளை மதுரைப் பகுதிகளில் அடையாளச் சின்னங்களாக அமைக்குமாறு எம்ஜிஆர் உத்தரவிட்டார்.


தமிழறிஞர்களுக்கு மரியாதை

அதன்பேரில் திருவள்ளுவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பிலும், தொல்காப்பியருக்கு கே.கே.நகரிலும், தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோருக்கு தல்லாகுளத்திலும், தனிநாயகம் அடிகளுக்கு மேலமடை சந்திப்பிலும் சிலைகள் அமைக்கப்பட்டன. இவைதவிர வெளிநாட்டில் பிறந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வீரமாமுனிவர், ஜி.யு.போப், சுவாமிநாத அய்யர், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சிலைகளை 5.1.1981-ம் தேதி அப்போதைய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

தமிழன்னைக்கு சிலை

அதே காலகட்டத்தில் தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. அதனை உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ம் தேதி எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். இந்தச் சிலைகள் மதுரைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தின. சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் இவற்றைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

புலவர்கள் நினைவுத்தூண்

இதுதவிர சங்க காலத்தில் மதுரையில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் புலவர்கள், அவர்கள் இயற்றிய இலக்கியம், செய்யுள் போன்றவற்றைச் சேகரித்து, அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தல்லாகுளம் மைதானத்தில் நினைவுத்தூண் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை நாவலர் நெடுஞ்செழியன் முன்னிலையில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் 14.4.1986-ம் தேதி திறந்து வைத்தார். இதுதவிர பாரதியார், வ.உ.சி., ராபர்ட் டி நோபிலி போன்றோருக்கும் மதுரையில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

32 ஆண்டுக்குப் பின் இன்று

எம்ஜிஆரால் தமிழறிஞர்கள் சிலைகள் அமைக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஆனால் அதன்பின் வந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் போதிய ஆர்வம் காட்டாததால் நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அவை சிதிலமடைந்து வருகின்றன. திருவள்ளுவர் சிலையின் கழுத்துப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு, உடைந்து விழும் நிலையில் உள்ளது. உ.வே.சா, கவிமணி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், அவை இருப்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. இவை போலவே மேலும் பல இடங்களிலுள்ள சிலைகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்படாததால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களால் எந்த நேரமும் சேதமடையும் சூழல் நிலவுகிறது.

சாரத்துக்கு தூண் தந்த தமிழன்னை

தமிழன்னை சிலை அமைந்துள்ள தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி நிர்வாக அனுமதியுடன் அடிக்கடி மாநாடு, கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமிழன்னை சிலை அமைந்துள்ள கல் தேரின் தூண்களில் சாரம் அமைத்து, பிளக்ஸ் போர்டுகளைக் கட்டுகின்றனர். இதனால் தமிழன்னை சிலை மறைக்கப்படுவதுடன், தேரின் தூண்கள் வலுவிழந்து உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் புலவர்கள் நினைவுத்தூண் மீதும் சாரம் கட்டி வந்ததால் அதன் ஒருபகுதி இடிந்து சேதமடைந்துவிட்டது. ஆனால் இவற்றைத் தடுக்கவோ, இடிந்த பகுதியை சீரமைக்கவோ யாரும் முன்வராதது வேதனையளிப்பதாக உள்ளது.

அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் இந்த அடையாளச் சின்னங்கள் அழிந்து போகாமல் தடுக்க, இப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மதுரை தமிழன்னை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x