

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரனின் ட்விட்டர் பதிவு, தமிழக அரசியல் நிலவரத்தோடு சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
அஸ்வின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன் ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாட்டு இளைஞர்களே, விரைவில் 234 வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன'' என்று பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து அவரின் பதிவு தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான சீட்களாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. புதிய முதலமைச்சர் பதவியேற்க இருந்த நிலையில், அவரின் பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதில், ''நண்பர்களே, தயவுசெய்து அமைதி அடையுங்கள். நான் கூறியது வேலை வாய்ப்புக்கான முகாம். இதில் அரசியலுக்கு இடமில்லை. எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது?'' (#howmuchtwisting) என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அஸ்வினின் மேலாளர் 'தி இந்து'விடம் கூறும்போது, ''அஸ்வின் 234 என்று கூறியிருந்தார். அந்த எண் ஃபேன்ஸி எண் என்பதுதான் அதற்குக் காரணம். இதில் அரசியலுக்கு இடம் இல்லை. அவரின் ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமி அமைப்பு, அஸ்வின் அறக்கட்டளை மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவது குறித்தே குறிப்பிட்டிருக்கிறார்'' என்றார்.