

தினகரனின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் முடிவை மாற்றுவதற்காக லஞ்சம் தரும் அளவுக்கு அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முயன்றிருக்கிறார். தினகரனின் இதுபோன்ற சட்டவிரோத செயலை அவரது தனிப்பட்ட நடத்தையாக பார்க்கக்கூடாது.
அதிமுக அம்மா கட்சி மற்றும் தினகரனனின் வழிகாட்டுதல்படி செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசின் செயல்பாடுகளாகத்தான் பார்க்க வேண்டும்.
இந்த அரசு இனியும் தொடர அனுமதித்தால் தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஊழலும், முறைகேடுகளும் பெருகிவிடும்.
இதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தினகரனின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.