

# பள்ளிப்பாளையம் சாயக் கழிவுநீர்ப் பிரச்சினைக்கு நீண்ட காலமாகத் தீர்வு காணப்படவில்லை. இங்குள்ள சாயப் பட்டறைகளின் சாயக் கழிவுநீரால் காவிரி ஆறு மாசடைந்துள்ளது. நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. சாயப் பட்டறைகளை முறைப்படுத்தி, சாயக் கழிவுநீரைச் சுத்திகரித்து ஆற்றில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, குப்பையில்லா நகராட்சி என்கிற பெருமையைப் பெற்றிருந்தது நாமக்கல். ஆனால், இன்றோ தொகுதியின் பல இடங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. கழிவுநீர் தேங்கும் பிரச்சினைகளும் அதிகம். கழிவுநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
# தொகுதி முழுவதுமே பரவலாகக் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கிறது. தொகுதியில் காவிரி ஓடியும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நீண்ட காலத் தீர்வுகளைத் தரும் குடிநீர்த் திட்டங்களை இங்கு செயல்படுத்த வேண்டும்.
# இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வந்தாலும் பாதிப்பு நாமக்கல்லுக்குத்தான். ஏற்றுமதிக்குத் தடை விதிக்கிறார்கள். உள்ளூர், உள்நாடு கோழி, முட்டை விற்பனையும் பாதிக்கப்படுகிறது. அதற்குத் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு கோழிப் பண்ணையும் உயிரியல்ரீதியில் பாதுகாப்பானது என மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை சான்று வழங்க வேண்டும். பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பண்ணையாளர்கள் தயாராக இருக்கின்றனர். அவ்வாறு வழங்கினால், நாட்டின் வேறொரு பகுதியில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டாலும் இங்கு விற்பனை, ஏற்றுமதி பாதிக்காது.
# தொழில் நசிவால் ஏராளமான சிறு கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்கிறார்கள் சிறு பண்ணையாளர்கள். தொழிலை மேம்படுத்த தமிழகம் போல் பிற மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# நாமக்கல்லின் பிரதானத் தொழில், லாரி கட்டுமானம் செய்தல். இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பாடி கட்ட லாரிகள் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்தத் தொழில் சரிவைச் சந்தித்துவருகிறது. இதற்குத் தீ்ர்வுகாண 2008-ம் ஆண்டு தொகுப்புத் தொழிற்கூடங்கள் அமைப்பு (கிளஸ்டர்) ஏற்படுத்தப்பட்டது. தொழிற்சாலை அமைக்க மூன்று ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டது. இதற்காக மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டது. அதில் 10% மாநில அரசு அளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அந்த அமைப்பு முடங்கிக்கிடக்கிறது.
கிளஸ்டர் அமைக்கப்பட்டால், லாரிகளுக்குத் தேவையான பாடி மற்றும் கேபின் இங்கேயே தயாரிக்கலாம். இதனால், குறைந்த விலையில் கேபின், பாடி வழங்க முடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு விற்பனை வரி, சுங்க வரி மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால், தொகுதியின் எம்.பி-யான காந்திச்செல்வனிடம் முறையிட்டும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை. மேலும், நாமக்கல்லில் லாரி பாடி கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் வகையில் நாமக்கல்லில் சிட்கோ ஏற்படுத்த வேண்டும் என்பது லாரி கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கை.
# திருச்செங்கோடு நகரத்தில் லாரி, ரிக் தொழில் பிரதானம். அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினை. அதற்குத் தீர்வு காண சேலம் சாலை, பரமத்தி சாலை ஆகியவற்றை இணைத்து, வட்டச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நி்றைவேற்றப்படவில்லை. நாமக்கல் - ஈரோடு சாலையில் ராஜாகவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
# தொகுதியில் ஆற்றுப்பாசனம் இல்லாததால் திருமணிமுத்தாறு - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். அதற்கான திட்ட வரைவு பலமுறை தயார்செய்யப்பட்டும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
# சேந்தமங்கலம் பகுதியில் காய்கறிச் சாகுபடி அதிகம். எனவே, அவற்றைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.
# நாமக்கல் நகரின் நடுவே உள்ள பேருந்து நிலையமும் வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம். பேருந்து நிலையத்தை ராசிபுரம் அரசுப் போக்குவரத்துக் கிளைப் பணிமனை அருகே மாற்றம் செய்ய வேண்டும் என்கின்றனர் மக்கள்.
# கல்வி மாவட்டமான நாமக்கல்லில் அரசுப் பொறியியல் கல்லூரியும் மருத்துவக் கல்லூரியும், மூலிகைகளுக்குப் பெயர்பெற்ற கொல்லிமலையில் சித்த மருத்துவக் கல்லூரியும் கொண்டுவருவேன் என்று எம்.பி. வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை.