

தியாகத்தை நினைவுறுத் தும் வகையில் இஸ்லாமிய வரலாற்றில் முன்னெடுக்கப் பட்ட சம்பவங்களை ஹஜ்ஜுப் பெருநாள் எடுத்துக் கூறுகிறது. முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு பெருநாட்கள். ஒன்று, ஈகைத் திருநாள்; மற்றொன்று தியாகத் திருநாள்.
இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத்தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்து வதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட முயற்சிகள் செய்வதும் அவசியமாகும். இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘அல்லாஹ் ஒருவனுக்கே வழிப் பட வேண்டும்’ என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறியதால் கடும் எதிர்ப்புகள், இன்னல்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையும் அவர்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டார்கள்.
இறைவன் கூறுகிறான்: ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமைப் படுத்துங்கள் (2:196) மக்காவில் உள்ள கஅபாவுக்கு சென்றுவர சக்தி பெற்றவர்கள், அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும் (3:97) இது அல்குர் ஆனில் உள்ள திருவசனங் களாகும்.
நபி (ஸல்) கூறினார்கள்: இஸ்லாம் எனும் மாளிகை ஐந்து தூண்கள்மீது நிறுவப்பட்டுள் ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறை வன் இல்லை என்றும், முஹம்மத் ஸல் அல்லாஹ் வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார்கள் எனும் உறுதிமொழி. தியாகத்தின் பெருமையை உலகறியச் செய்த (நபி) இப்றாஹிம் (அலை) தனது அன்பு மனைவி அன்னை ஹாஜிரா அவர்களின் தியாகத்தின் தவிப்பு, இவர்களது புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகம் போன்றவற்றின் ஒட்டுமொத்த தியாகமாகவே ஹஜ்ஜுப் பெருநாள் நிலைநிறுத்தப்படுகிறது.
இப்றாஹிம் நபி திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த வேதனையை குர்ஆன் கூறுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில், தமது முதிர்ந்த பருவத்தில் அவருக்கு இஸ்மாயில் என்ற குழந்தை பிறக்கிறது. சிறிது காலத்துக்குப் பிறகு, இறைவனது உத்தரவின்பேரில், தன் மனைவி ஹாஜிரா அம்மையாரையும். மகன் இஸ்மாயில் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிக்க வைத்து இறைவன் சோதிக்கிறான். அந்த சோதனையின் விளைவாக எழு கின்ற தியாகத்தை நினைவுகூரு வதற்காக இந்த புனித ஹஜ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தன் மைந்தரான நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார்கள். மகனையே கூரான கத்தியைக் கொண்டு அறுக்கிறார்கள்.
அந்த தியாகம் எழுத்தில், சொல்லில் வடிக்க முடியாத தியாகம் இறுதியில் கத்திக்கு, அறுக்கும் சக்தியில்லாமல் போகி றது. எல்லாம் வல்ல இறைவன் ஓர் ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு பகரமாக பலிகொடுக்கச் செய்ததுடன், இனி உலக நாள் வரை, வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானி கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
ஹஜ்ஜை நோக்கிச் சென்றவர்கள் ‘லப்பைக் உனது அழைப்பை ஏற்றுவிட்டேன்’ என்று கூறும்போதே, இந்த உலகத்தை துறந்துவிட்டேன் என்ற உணர்வு அங்கே பற்றிக்கொள்கிறது. உற்றார், உறவினர்கள், உறவுகளை விடுவித்துக் கொண்டு இறை வனின் உறவோடு தன்னை இறுகப் பிணைத்துவிட்டதொரு நம்பிக்கை அவர்களது உள்ளத்தில் மலர்கிறது. சொத்து சுகங்களும் ஒருமுறை நீர்க்கானலாக தோன்றி மறைந்து, உள்ளமோ இந்த உலகத்தை விட்டு அகல்கிறது. ஒரு புதிய உலகத்தை நோக்கிய புதிய பயணம் ஹஜ்ஜின் ஊடாக ஆரம்பமாகிறது.
இஸ்லாத்தின் ஜம்பெரும் கடமையாகிய புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்று கூடியுள்ள சந்தர்ப்பம் இது. ஆண்டுதோறும் சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டும் இதுபோன்ற ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பலதரப்பட்ட கட்சிகள், இயக்கங்கள், வழிபாடு கள் என எந்த வேறுபாடுகளும் ஹஜ்ஜின்போது ஏற்படுவதில்லை. இதை உணர்ந்து செயல்பட நம் மனம் முன்வர வேண்டும்.
‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
என்கிறார் வள்ளுவர். விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை!
தொடர்புக்கு: sadhaquthullahasani@gmail.com