Published : 01 Mar 2014 04:01 PM
Last Updated : 01 Mar 2014 04:01 PM

20 ஆண்டுகள் கழித்து இலங்கை கடற்படையினர் மீது ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை கடற்படையினர் மீது ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் 20 ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 01 அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் ஒரு விசைப்படகில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வலைகளை அறுத்து எறிந்து, படகுகளை சேதப்படுத்தியும் சென்றனர். இது குறித்து விசைப்படகின் உரிமையாளர் சகாயராஜ் கடந்த பிப்ரவரி 2 அன்று ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுபோல கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பாம்பன் நாட்டுப்படகு மீனவர் ஜான் பிரிட்டோ பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை நெடுந்தீவு மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஜான் பிரிட்டோவின் வலைகளை அபகரித்துச் சென்றனர். இதுகுறித்து ஜான் பிரிட்டோ பாம்பன் காவல் நிலையத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் இலங்கை கடற்படையினர் மீதும், 24 தினங்கள் கழித்து பாம்பன் காவல்துறையினர் இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய மீனவப் பிரதிநிதி போஸ் கூறியதாவது,

1990களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினால் நமது காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழ் கொலைக் குற்றமாக வழக்கு பதிவு செய்யும்.

தற்போது வெறுமனை மீனவர்களை காயப்படுத்துதல், தாக்குதல், வலைகளை திருடுதல், உடமைகளை சேதப்படுத்துதல் என்றளவில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த இரு வழக்கு பதிவின் மூலம் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்கவோ, மீனவர் பிரட்சினைக்கு தீர்வோ கிடைத்து விடாது. மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆட்சியாளர்கள் மீனவர்களை ஏமாற்றுவதற்காக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவை வெறுமனே தேர்தல் பிரச்சாரத்திற்காக வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கு பயன்படலாம். ஆனால் மீனவர்கள் ஏமாற மாட்டார்கள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x