

கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கான பொதுப்பிரிவு கலந் தாய்வு தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 17 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை கால்நடை பராமரித்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழங்கினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை வேப் பேரியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்லில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரியில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை உள்ளன.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங் கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளி கல்லூரி யில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்லூரியில் கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை வேப் பேரியில் உள்ள கால்நடை மருத்து வக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 33 இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து,வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கால்நடை பராமரித்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தரவரிசைப் பட்டியலில் முதல் 17 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். அப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சு.திலகர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.பாலச்சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர். தரவரிசைப் பட்டியலில் 17 பேரில் 9 பேர் மாணவர்கள், 8 பேர் மாணவிகள். இவர்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் 7 மாணவர்கள், 5 மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கலந்தாய்வு
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப பட்டபடிப்பு (பி.டெக்) போன்றவற்றுக்கு ஜூலை 15-ம் தேதி (இன்று) கலந்தாய்வு நடைபெறுகிறது.
அமைச்சர் தாமதம்
பொதுப் பிரிவு கலந்தாய்வு கால்நடை பராமரித்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பகல் 12 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் காலை 9 மணிக்கே கலந்தாய்வுக்கு வந்தனர். ஆனால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பகல் 2 மணிக்கு கலந்தாய்வுக்கு வந்தார். இதனால் மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் என அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் 2 மணி நேரம் காத்திருந்தனர். இதனால் கலந்தாய்வில் பரபரப்பு ஏற்பட்டது.