

கர்நாடகவில் இன்று (9-ம் தேதி) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழக லாரிகள் நேற்று மாலை முதலே ஓசூரில் நிறுத்தப்பட்டன. இதனால் பல கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் கடும் கண்டனம் தெரி வித்து சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபடுவதோடு, தமிழக பேருந்துகள், லாரிகள் மீது தாக்கு தல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி முதல் தமிழக லாரிகள் கர்நாடகத் துக்கு இயக்கப்படவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தமிழக லாரிகள், கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர். இந்நிலையில், இன்று (9-ம் தேதி) கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளதால், மீண்டும் நேற்று மாலை 6 மணி முதல் தமிழக லாரிகள் மாநில எல்லை யில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி நகரங்களில் நிறுத்தப்பட்டு வருவ தாக போலீஸார் தெரிவித்தனர். இதனால், பல கோடி மதிப்புள்ள சரக்குகளுடன் லாரிகள் ஓசூரில் முடங்கியுள்ளன.
தனியார் பேருந்துகளில் கூட்டம்
மூன்றாவது நாளாக ஓசூர் எல்லைப் பகுதியில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட னர். ஓசூர் பேருந்து நிலையத் தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கர்நாடக அரசு போக்குவரத்துத் துறையி னர், 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என தொடர்ந்து இயக்கினர். அதேபோல தனியார் பேருந்து களும் இடைவிடாமல் இயக்கப் பட்டு வசூலில் ஈடுபட்டன.
ரூ.800 கோடி வர்த்தகம் பாதிப்பு
சேலம்
கர்நாடக மாநிலத்தில் இன்று (9-ம் தேதி) வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. பாதுகாப்பு கருதி தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் லாரிகள் கர்நாடக மாநிலத்துக்கு செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலாளர் தன்ராஜ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் கடந்த 4 நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வாகனங்களை கர்நாடகாவில் அடித்து சேதப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, ஜவ்வரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு ரூ.800 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.